சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோபனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் !

சுவீடனில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோபனுக்கு (வயது 63) எதிராக இன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை  கொண்டு வந்தது.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் ஒரு வாரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய அரசு அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும்.
சுவீடன் நாட்டில் எதிர்க்கட்சியால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் பிரதமர் ஸ்டீபன் லோபன் என்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றம் முடங்கியுள்ள நிலையில், லோபன் பதவி விலகினால், யார் தலைமையில் புதிய அரசாங்கத்தை சபாநாயகர் அமைப்பார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தனது கட்சி ஸ்டீபன் லோபனுக்கு எதிராக வாக்களித்திருந்தாலும், ஒருபோதும் வலதுசாரி தேசியவாத அரசாங்கம் அமைவதற்கு ஆதரவு அளிக்காது என இடதுசாரி கட்சி தலைவர் நூசி தாட்கோஸ்டர் தெரிவித்தார்.
சுவீடன் தற்போது புதிய அரசாங்கம், அல்லது இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்றாலும் அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் வரை மட்டுமே பொறுப்பில் இருக்கும்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *