இணையத்தளங்களின் மூலம் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலாளராக விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காக இதுவரை மொத்தம் 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் சிறுமியின் தாயார், சாரதிகள், துறவியொருவர் மற்றும் விளம்பரத்திற்காக வலைத்தளத்தை வடிவமைத்தவர்களும் உள்ளடங்குவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
சிறிமியொருவர் பாலியல் நடவடிக்கைக்காக இணையத்தளத்தில் விற்பனை செய்யப்படுவதாக கல்கிஸை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து முதல் சந்தேக நபர் ஜூன் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் மொறட்டுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியகம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 17 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 16 பேர் தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெல்கொட பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளார்.