ஞானப்பால் குடித்து தேவரம் பாடிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குப் பிறகு விடுதலை கீதம் பாடியவர் மேதகு நாயனார். மேதகு என்ற இந்தப் பெயரை நக்கல் நளினத்துக்காக வைத்தார்களா இல்லை உண்மையிலேயே நேர்மையுடன் தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் மேதகு படம் ஒரு ஆளுமையுடைய வரலாற்றை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
அந்தப் படத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் பிரபாகரனைப் பற்றியும் எதுவுமே தெரியாத சிலரே உருவாக்கியுள்ளனர். அந்தப் படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள், நடந்த சம்பவங்கள் பற்றிய எவ்வித ஆய்வும் இல்லாமல், சகட்டுமேனிக்கு காட்சிப்படுத்தப்பட்டு, ஒரு வரலாற்றுக் குப்பையாக்கி உள்ளனர். மழைக்கு முளைக்கும் காளான்களைப் போன்று பலர் வரலாற்றைப் பதிவு செய்கிறோம் என்ற பெயரில் தங்கள் தேவைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்குமேற்ப வரலாற்றைச் சோடிக்கலாம் எனக் கருதுகின்றனர். அதற்கு மேதகு நல்லதொரு உதாரணம்.
படத்தின் தலைப்பில் இருந்து இறுதிவரை படம் உயிரோட்டமாக இல்லை. சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்களுடைய கட்டாயத்தின்படி எடுக்கப்பட்ட படமாகவே தெரிகின்றது. உலகத்தில் எத்தனையோ தலைவர்களுடைய ஆளுமைகளுடைய படங்கள் தத்துரூபமாக எடுக்கபட்டு; காலத்தால் அழியாத வரலாற்று ஆவணங்களாக அமைந்து; பல விருதுகளையும் வென்றுள்ளன. ஆனால் மேதகு படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பிரச்சாரவாடை தாங்க முடியவில்லை. உலகில் எந்தத் தலைவரதும், ஆளுமையினதும் வரலாறும் இவ்வளவு பிரச்சாரவாடையுடன் உண்மைக்குப் பிறம்பாகப் பதிவு செய்யப்படவில்லை. உண்மையான தலைவர்களுக்கு செயற்கையாக விம்பம் கட்டவேண்டிய அவசியமும் இல்லை. பிரச்சாரமும் தேவையில்லை.
காந்தியின் வரலாற்றை மகாத்மா என்ற பெயரில் படமாக்கவில்லை. காரணம் அத்தலைவர்களுக்கு பிரச்சாரம் தேவைப்பட்டிருக்கவில்லை. தலைவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களும் அல்ல. இதுவரை இவ்வுலகில் தலைவர்களாக கொள்ளப்பட்டவர்களில் தீபெத் மக்களுக்காக குரல்கொடுக்கும் தலய்லாமா மட்டுமே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் சிறுபிராயம் முதல் சமயகட்டுப்பாடுகளோடு வாழ்பவராகவும் உள்ளார். ஏனைய தலைவர்கள் சாமானியர்களாகப் பிறந்து தலைவர்களாக ஆகினர். அவர்கள் சாதாரண மனிதருக்குள்ள பண்புகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரும் தாங்கள் எப்போதும் சரியாக இருந்ததாகவோ சுத்தமான சுவாமிப் பிள்ளைகளாக வாழ்ந்ததாகவோ குறிப்பிடவில்லை. தங்கள் ஆளுமைகளினால் தங்களை ஆளுமைகளாக நிறுவினர். அவர்கள் தங்களைப் பற்றிய விம்பங்களைக் கட்டமைக்கவில்லை. அதனால் அவர்கள் சர்வதேச அளவிலும் பல்வேறு தரப்பினராலும் ஆளுமைகளாக தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வே பிரபாகரனையும் பொறுத்தவரை அவர்கள் தங்கள் brand name யை – unique selling pointயை செயற்கையாகக் கட்டமைக்க முயல்கின்றனர். அந்த முயற்சியின் ஒரு அம்சமே மேதகு.
படத்தில் சம்பவம் நடந்த திகதியையும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் வைத்துக்கொண்டு கதைகள் புனையப்பட்டு உள்ளது. இப்படத்தில் உண்மையின் வறுமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனுடைய வரலாறு – நேர்மையாக் பதிவு செய்யப்பட முடியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. புலிக்குட்டிகளின் விசிலடிச்சான் குஞ்சுகளின் தலையீடு இல்லாமல் காத்திரமாக எடுக்கக் கூடிய ஒரு படைப்பாளியினாலேயே அவ்வாறானதொரு சிறந்த படைப்பைத் தர முடியும்.
பூலான் தேவியின் வரலாறு திரைப்படமாக்கப்பட்டது. அத்திரைப்படத்தில் பூலான் தேவியின் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியும் மிக நேர்மையுடன் நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டது. பிரித்தானியாவின் சனல் போர் பில்ம்ஸ் இனால் தயாரிக்கப்பட்ட இப்படத்தை சேகர் கபூர் இயக்கி இருந்தார். அதேபோல் சந்தோஸ் சிவனின் ‘தி ரெறறிஸ்ற்’ திரைப்படம் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு தற்கொலைக் கொலையாளியின் உணர்வை மையமாக வைத்து உயிரோட்டமாக அப்படம் தயாரிக்கப்பட்டது. அப்படத்தில் அத்தற்கொலைப் போராளி இன்னொரு போராளியுடன் உறவுகொள்வதை மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் வைத்துக்கொண்டு, இயக்கத்தில் அப்படி நடப்பதில்லை என்று மனித உணர்வுகளைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக விமர்சனங்களை முன் வைத்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதோ பிரபாகரன் பிறக்கின்ற போதே அவர் விடுதலை உணர்வோடு பிறந்து மூன்று வயதிலேயே ‘தமிரின் தாகம் தமிழீழத் தாயகம்’ சொன்னார் என்பது போலவே தான் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அத்திரைப்படம் பதிவு செய்கின்ற துரையப்பா கொலை வரையான காலகட்டத்தில் வே பிரபாகரன் ஒரு ஆர்வக்கோளாறுடைய இளைஞர். பிரபாகரனுக்கு தம்பி என்ற பெயர் வரக்காரணமே அவர் இருந்தவர்கள் எல்லோரிலும் இளையவராக இருந்ததும் அவரை யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்ததும் வரலாறு. குட்டி மணி தங்கத்துரை போன்றவர்கள் அதனாலேயே ‘மல்லி’ என அழைத்தனர். பிரபாகரனுடன் தம்பி நிலைத்துக்கொண்டது. படத்துக்கு தம்பி என்ற பெயரே மிகப்பொருத்தமாக அமைந்திருக்கும்.
அன்றைய சூழலில் இருந்த அரசியல் பின்னணியைக் கூட படம் தவறவிட்டுவிட்டது. துரையப்பாவை துரோகியாக்கியது தமிழர் விடுதலைக் கூட்டணி. பிரபாகரன் உட்பட்ட இளைஞர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆவா குறூப். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் துரையப்பாவிற்கு இயற்கை மரணம் இல்லை என்று சொல்ல பிரபாகரன் போன்றவர்கள் துரையப்பாவை படுகொலை செய்தனர். தமிழீழ கோசத்தை கண்டு பிடித்து பிரபாகரன் போன்ற இளைஞர்களின் கையில் கொடுத்ததே தமிழர் விடுதலைக் கூட்டணி. பிரபாகரன் ஒன்றும் விடுதலை உணர்வோடு பிறந்து வளர்ந்து போராட வரவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தூண்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். அவர் விடுதலைப் போராட்ட புத்தகம் எல்லாம் படித்தார் என்பது சற்று ஓவர். ஆனந்தவிகடன் குமுதம் கல்கி படித்ததாகவே வே பிரபாகரன் நேர்காணல் ஒன்றிலேயே சொல்லி உள்ளார்.
பிரபாகரன் தீயிட்டு கொழுத்திய பஸ் வண்டி கூட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியாகத் தெரியவில்லை. தமிழகத்தில் ஓடும் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் பஸ் வண்டியே கொழுத்தப்பட்டது.
இதெல்லாவற்றுக்கும் மேலாக தமிழாராச்சி மாநாட்டைச் சித்தரித்த காட்சி அமைப்புகள் மிக மோசமானவை. யாழ்ப்பாண தமிழராய்ச்சி மாநாடு மண்டபத்தினுள் நடத்த முடியாமல் முத்தவெளி மைதானத்தில் மக்கள் திரண்டனர். ஆனால் படத்திலோ நூற்றுக்கும் குறைவான மக்கள் மத்தியில் புத்தகவெளியீடு நடப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் இலங்கைக்குள் சட்டவிரோதமாக கடல்வழியாக வந்திருந்த இரா ஜனர்த்தனன் உரையாற்ற திட்டமிட்டு இருந்தமையாலேயே பொலிஸார் அங்கு செல்லப்பணிக்கப்பட்டனர். அப்பொலிஸ் அதிகாரி மேலே நோக்கித் துப்பாக்கிச்சூட்டை நடாத்த மின்சாரக் கம்பி அறுந்து இரும்புக் கம்பியில் வீழ்ந்தது. அப்போது அந்த இருப்புக் கம்பியில் கையைப் பிடித்துக்கொண்டு நின்றவர்களே மின்சாரம் தாக்கி கொல்லப்பட்டடனர். அன்று மரணித்த ஒன்பது பேர் மின்சாரம் தாக்கியும் இன்னுமொருவர் மாரடைப்பாலும் மரணமானதாக பிரேத பரிசோதணையிலும் உறுதிப்படுத்தப்பட்டது. மேதகு வில் காட்டப்பட்டது போல் யாரும் பொலிஸாரால் தாக்கப்பட்டு மரணிக்கவில்லை.
வரலாற்றை எப்படியும் புனையலாம் எப்படியும் திரிக்கலாம் என்று எம்மத்திலயில் இன்றும் சிலர் நம்புகின்றனர். அவர்களுக்கு பாடம் வரலாறே பாடம் கற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வே பிரபாகரன் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக எத்தனையோ படுகொலைகளைச் செய்தும் இன்றுவரை அவர்களுடைய வரலாற்றை துடைத்தெறிய முடியவில்லை. ஆண்டுதோறும் நினைவுக் கூட்டங்கள் நடைபெறுகின்றது. ஆனால் வே பிரபாகரனுக்கு எவ்வித ஞாபகார்த்த நிகழ்வுகளும் இல்லை. எதிர்காலத்திலும் அவ்வாறு அமைய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. வே பிரபாகரன் மே 18 இல் கொல்லப்பட்டாரா மே 19 இல் கொல்லப்பட்டாரா எப்போது கொல்லப்பட்டார் அல்லது இன்னும் இருக்கின்றாரா என்பதற்கே அவ்வமைப்பு விடைகாணவில்லை.