முல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று வியாழக்கிழமையும் காயமடைந்தோர், நோயாளிகளென 400 பேர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் (ஐ.சி.ஆர்.சி.) வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசியன்’ கப்பல் மூலமே இவர்கள் அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான புதுமாத்தளன் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையும் இதே கப்பல் மூலம் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகள் 240 பேரும், அவர்களுக்கு உதவியாக வந்த 116 பேரும் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து, திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். இதில் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேநேரம், நேற்று மாலை கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் நோயாளிகள் மற்றும் காயமடைந்தோர் எத்தனை பேர் என்பது தொடர்பாக சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்றுக் கொண்டு வரப்பட்ட நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாது, ஐ.சி.ஆர்.சி.யினால் 160 மெத்தைகளும், மருத்துவ விநியோக உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் சரசி விஜேரட்ன தெரிவித்தார்.
அத்துடன், புதுமாத்தளன் பகுதியில் இன்னும் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் இருப்பதாகவும், அவர்களையும் கப்பல் மூலம் எடுத்து வரும் ஐ.சி.ஆர்.சி.யின் பணிகள் தொடருமென்றும் சரசி விஜேரட்ன மேலும் கூறினார். இதேநேரம், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 120 பேருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன