பங்களாதேஷில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண படையெடுக்கின்றனர்.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீற்றர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணையில் ஒரு பசு உள்ளது. அதனை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர். ராணி என பெயரிடப்பட்டு உள்ள அந்த பசு 51 சென்ரி மீற்றர் நீளமும் 26 கிலோகிராம் எடையுமுள்ளது.
இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது. கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவை விட இது 10 சென்ரி மீற்றர் குறைவு என்று அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். கேரளாவைச் சேர்ந்த மாணிக்யம் என்ற பசுவை உலகின் குள்ளமான பசு என, கின்னஸ் உலக சாதனை அமைப்பு கடந்த 2014ல் அங்கீகரித்தது. இதன் உயரம் 61 செ.மீ., என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி பசுவின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பசுவை காண ஆயிரக்கணக்கானோர் அந்த பண்ணைக்கு படையெடுத்து வருகின்றனர். அந்தப் பசுவுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என, பண்ணை உரிமையாளரிடம் சுகாதாராத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.