மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும், அரசாங்கம் அறிவித்துள்ள புதிய பாதுகாப்பு வலயத்திற்குள் வந்து சேர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
எனவே, அவர்களை படகுகள் மூலம் இலகுவாக முல்லைத்தீவுக்கு அழைத்து வந்துவிட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்கனவே, அறிவித்திருந்த பாதுகாப்பு வலயத்தை விடவும், புதிய வலயத்திற்கு சிவிலியன்கள் அதிகம் வருகை தர ஆரம்பித்துள்ளதாகக் கூறிய அமைச்சர் சமரசிங்க அவர்களை அரசாங்கக் கடடுப்பாட்டுப் பகுதிக்குக் கொண்டு வந்து தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களை அழைத்து வருவதில் தொடர்ந்தும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, நேற்றுக் காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் கட்டுப்பாடற்ற வன்னிப் பகுதியிலிருந்து 1613 பேர், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளதாகக் கூறிய அமைச்சர் இது வரை 34 ஆயிரம் பேர் இவ்வாறு வந்துள்ளதாகக் கூறினார். இவர்கள் 30 ஆயிரம் பேர் வவுனியாவிலும், ஏனையோர் யாழ்ப்பாணம், ஓமந்தை மன்னார் ஆகிய இடங்களிலுள்ள இடைத்தாங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தவிர நேற்றைய தினம் 225 பேர் கிளிநொச்சிக்கு வந்துசேர்ந்துள்ளதாகக் கூறிய அமைச்சர், அவர்கள் அனைவரையும் ஓமந்தைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நேற்று முன்தினம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு 404 பேர் அழைத்துச் வரப்பட்டுள்ளனர். இவர்களுள் 351 பேர் நோயாளர்கள் என்றும் ஏனைய 53 பேர் அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நோயாளர்களுள் 137 ஆண்கள், 136 பெண்கள், 43 சிறுவர்கள் 35 சிறுமிகள் ஆகியோர் அடங்குவரெனத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, இரு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.