கொத்தலாவல பல்கலைகழக சட்டமூலத்துக்கு எதிரான போராட்டங்களில் ஆசிரியர் சங்கம் தன்னுடைய வலுவான எதிர்ப்பினை காட்டிவருகின்றது. முக்கியமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான ஜோசப்ஸ்டாலின் கைது செய்யப்பட்டதிலிருந்து இந்த எதிர்ப்பு இன்னும் வலுவடைய ஆரம்பித்துள்ளது. இந்த எதிர்ப்பின் நீட்சியாக இணையவழி கற்பித்தலிலிருந்து ஆசிரியர்களை விலகுமாறு ஆசிரியர் சங்கம் வலியுறுத்திவருகின்றது.
இந்நிலையில் , இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் வேலு இந்திரச்செல்வன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இலவசக்கல்வியின் உரிமையை பாதுகாப்பதற்காக நாம் தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கின்றோம்.
இந்நிலையில் இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேலும் இத்தகைய செயற்பாட்டுகளுக்கு எதிராக கல்வி சமூகம் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கும்.
இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.