2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.
தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரைஅமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் இராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறிவரும் நிலையில், அந்நாட்டின் 85 சதவீதப் பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பல ஆப்கான் வீரர்கள் அச்சம் காரணமாக அயல்நாடுகளிடம் தஞ்சமடைய ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறுவது பயத்தை அளிக்கிறது என்று ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெர்மனி பத்திரிகை ஒன்றுக்கு ஜோர்ஜ் டபிள்யு புஷ் அளித்த பேட்டியில் கூறுகையில், “இது ஆபத்தைக் குறிக்கும். ஆப்கனிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தியப் படைகள் வெளியேறுவது அந்நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அவர்கள் அங்குள்ள கொடுங்கோலர்களால் தண்டிக்கப்படலாம். நினைக்க முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த முடிவு சோகத்தை அளிக்கிறது” என்றார்.