யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியை தனியார் மயப்படுத்தல், தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்கு முறைகளுக்கு பாவிக்காதே, கல்வியில் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு, தங்களது எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “அடக்குமுறை என்பது தங்கள் மீதும் பிரயோகிக்கப்படும் என்பதை உணராத பட்சத்தில், சிங்கள மக்களின் அழிவும் நிச்சயம் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,
73 வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்து வந்த அடக்குமுறைகளும், அநீதிகளும் தற்போது கட்சி பேதமின்றி அனைவர் மீதும் பிரயோகிக்கப்படுகிறது. அத்துடன், இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தற்போது செயல்படும் தென்னிலங்கை சிவில் அமைப்புகள், கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பியதில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், அரசாங்கம் கொவிட் சூழலை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதியான இன்பம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.