“அதிகாரம் கையிலிருந்த போது அரசியலமைப்பை மீறியே பல சந்தர்ப்பங்களில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்.” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பங்கரவாதத் தடுப்பு சட்டம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த விசேட கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பதிலளிக்கையில்,
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவிருந்த காலப்பகுதியில் எப்.சி.ஐ.டியை உருவாக்கி அரசியலமைப்பை மீறியிருந்தார். ஊழல் ஒழிப்பு பிரிவை உருவாக்கிய சந்தர்ப்பத்திலும் அவர் அரசியலமைப்பை மீறியிருந்தார்.
ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை பற்றி பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. ரிஷாட் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் பல்வேறு தொடர்புகளை கொண்டிருந்த குற்றச்சாட்டுகளின் பிரகாரமே கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரது விவகாரம் தற்போது சட்ட மாஅதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹரின் பெர்ணான்டோ எம்.பியை கைதுசெய்வதற்கு எவ்வித தயார்படுத்தல்களும் இருக்கவில்லை. ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை தெரியுமென அவர் கூறியிருந்தார்.
பிரதான சூத்திரதாரி யாரென தெரியுமாக இருந்தால் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அந்த தகவல்களை வழங்குவது அவரது கடமையாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்தபோது பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்பை முழுமையாக மீறியே செயற்பட்டுள்ளார்.
அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் பற்றி பேசுவதற்கு அவருக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. என்றார்.