ரிஷாத் பதியுதீனின் வீட்டில் 11 பணிப்பெண்கள் துஷ்பிரயோகம் – ஒருவர் தற்கொலை – சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணிபுரிந்த 11 பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தி  திவயின எனும் செய்திதாளில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதற்கு முன்னர் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 11 யுவதிகள் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்களாகப் பணியாற்றிய காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அழைத்துவரப்பட்ட யுவதி ஒருவர் பம்பலப்பிட்டி பகுதியில் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அத்துடன் ரிஷாத் பதியுதீன் அமைச்சராகக் கடமையாற்றிய போது அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவர் ரிஷாத்தின் மைத்துனர் என தமக்குக் கிடைத்துள்ள தகவல் குறித்து பொலிஸார் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தையும் அந்த அறையையும் பொலிஸாருக்கு காண்பித்துள்ளார் என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த வேளை தீக்காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து ரிஷாத்தின் மனைவி, மனைவியின் தந்தை, மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

நேற்று காலை கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக குற்றஞ்சாட்டப்பட்டவர் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டுக்கு பணிப்பெண்ணாகக் கொண்டுவரப் பட்ட இளம் யுவதிகள் மற்றும் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பிரதான பொலிஸ் பரிசோதகர் பெண் அதிகாரி வருணி போகஹவத்தவை நியமிக்க மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நடவடிக்கை எடுத்துள்ளார் .

அதன்படி, ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பாலியல் துஷ் பிரயோகத்திற்குட்பட்ட யுவதிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக வருணி போகஹவத்த தலைமையிலான விசேட குழு மலையக தோட்டப்புறப் பகுதிகளுக்குச் சென்றுள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சகல யுவதிகளும் மலையக பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், நேற்று கைது செய்யப்பட்ட தரகர் மூலமாக அனைவரும் கொழும்பு அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வீட்டு பணிப்பெண்களான யுவதிகள் மற்றும் சிறுமிகளைக் கொழும்புக்கு அழைத்து வந்த தரகருக்கு இலட்சக் கணக்கான பணத்தைச் செலுத்த அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ரிஷாத் பதியுதீனின் வீட்டின் பின்புறத்தில் தனியாக அமைந்துள்ள சிறிய இருட்டு அறையில் மேற்படி யுவதிகள், சிறுமிகள் விடப்படுவதாகவும் இரவு 10.30 மணியளவில் குறித்த அறையின் கதவை அடைப்பதாகவும் மறுநாள் காலை 5.30 மணிக்கு திறக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அவர்கள் கழிப்பறைக்குச் செல்லக் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் டயகம சிறுமியை வீட்டுப் பணிபெண் ணாக அழைத்து வந்த தரகரிடம் நீண்ட நேரம் பொலிஸார் விசாரணை நடத்தி பல முக்கியமான தகவல்களைக் கேட்டறிந்துள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் 05 பொலிஸ் விசேட குழு குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும் எனத் தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *