சிறுமி ஹிஷாலினியை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்ற போதிலும், பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு முறையான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் தாய் மற்றும் உறவினர்களை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சந்தித்தபோதே இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அபிவிருத்தி அமைச்சு வழங்கும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் , சிறுமியின் குடும்பத்தாருக்கு நிதி உதவியையும் வழங்கினார்.
அத்துடன் மூன்று மாதங்களுக்குள் அந்த குடும்பத்துக்கு வீட்டை புனர்நிர்மாணம் செய்வதற்கும் சுயதொழிலை ஆரம்பிப்பதற்கும் தேவையான நிவாரணத்தை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா உறுதியளித்தார்.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா நுவரெலியா மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நுவரெலியா மாவட்ட செயலக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு உறுதியளித்துள்ளார்.