100 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தொழிலாளர் கட்டளைச் சட்டமே தற்போதும் காணப்படும் நிலையில் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்த அனுமதிக்கும் பெற்றோரை தண்டிக்க புதிய சட்டங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை எவரும் அடிமைப்படுத்த முடியாது என்பதற்காக தொழிலாளர் கட்டளைச் சட்டத்தை வலுப்படுத்த பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களில் பொருளாதார பிரச்சினைகள் இருந்தாலும் சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது அதற்கான தீர்வு அல்ல எனவும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
இவ்வாறு ஜீவன் தொண்டமான் கூறியுள்ள போதும் கூட இவை உளப்பூர்வமான வசனங்களா என்பது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியவை. ஏனெனில் இன்றைய மலையக மக்களின் பின்னடைவுக்கும் தேக்கமான வாழ்வியல்கோலத்துக்கும் பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் இந்த அரசியல்வாதிகளே.
சிறுவர்களை வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றம்தான். பெற்றோர்களை தண்டிப்பது எவ்வளவு முக்கியமோ அந்த பெற்றோருடைய நூற்றாண்டு கால வறுமைக்கு காரணமான அரசியல் தலைவரகளும் தண்டிக்கப்பட வேண்டும். இதே தோட்டத்தொழில் செய்பவர்களை போலத்தான் மலையக தமிழ்தலைவர்களும் இலங்கைக்கு இடம்பெயர்ந்து வந்தனர். ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் செல்வச்செழிப்பில் மிதக்க இவர்களை ஒவ்வொரு தேர்தலிலும் நம்பி புள்ளடியிட்ட மக்கள் அன்னமும் நாட்சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்திக்கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் நாட்சம்பளத்தை அதிகரிப்பதாக கூறி விட்டு வேலை நாட்களை குறைத்துள்ளது தொழிற்சங்கம். இது தொடர்பில் எந்த கரிசனையும் அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை. தேர்தல் காலங்களில் இதை பற்றி பேசி வாக்கு சேகரிக்க மட்டுமே 1000 ரூபாய் கதை இன்று வரை நடைமுறையில் உள்ளது. உண்மையிலேயே நீங்கள் மக்களுக்கான தலைவராக இது தொடர்பில் கவனம் செலுத்துபவர்களாயின் அவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான வழிகளை நடைமுறைப்படுத்துங்கள். 30 நாட்களுக்கான சம்பளமான ரூபாய் 30000 பெற்றுக்கொடுக்க வழி செய்யுங்கள். இது நடக்குமாயின் மலையக குடும்பங்களின் வறுமை அதிகளவில் இல்லாது ஒழியும். அவர்கள் இலங்கையின் எல்லா பகுதி மக்கள் போலவும் நிம்மதியான வாழ்க்கை வாழ்வர். அதை விடுத்துவிட்டு உரு பிரச்சினைக்கான தற்காலிக தீர்வை வழங்கி மேலும் மேலுமு் அந்த மக்கள் கூட்டத்தை வஞ்சித்துக்கொண்டிருக்காதீர்கள்.