யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அடுக்கடுக்காக வன்முறைச்சம்பவங்கள் அரங்கேறிகொண்டிருக்கின்றன. சிங்கள அரசு தமிழர்களை அடக்குகின்றது – சர்வதேசமே பார் என்றெல்லாாம் பேசிக்கொண்டிருக்கும் தமிழ்த்தலைவர்கள் இந்த சமூகப்பிறழ்வுகள் குறித்து வாய் திறப்பதே இல்லை. சமூகம் எப்படி போனால் என்ன..? தங்களுடைய வாக்கு வங்கியை நிறைத்தால் மட்டுமே போதுமானது என்ற மனோ நிலையிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறார்கள் போலும். இந்த வன்முறைச்சம்பவங்கள் குறித்து சந்தேக நபர்கள் என்ற பெயரில் சிலர் கைது செய்யப்படுகிறார்களே தவிர இவை கட்டுப்படுத்தப்படாது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளன.
நமது பகுதிகளிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருக்கு தொடர் அழுத்தங்களை பிரயோகிக்கும் பட்சத்தில் இவை தொடர்பில் காவல்துறையினர் அதிக கவனம் செலுத்துவர். ஆனால் நம் தலைவர்களுக்கு தனிநாடு கேட்பதற்கே நேரம் சரியாகவுள்ளதால் இவை பற்றி அலட்டிக்கொள்வதில்லை. நமது சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சமூகப்பிறழ்வொன்றை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதே வெளிப்படையான உண்மை.
இந்நிலையில் , யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்று இட்ம்பெற்றுள்ளது. இதன் போது படுகாயமடைந்த இளைஞர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த த.நிரோஷன் (வயது 25) என்பவரே படுகாயத்துக்கு உள்ளாகி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இளைஞன், வீதியால் சென்று கொண்டிருந்த வேளையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட குழுவொன்று வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தப்பிச் சென்றுள்ள சந்தேகபர்களை தேடும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.