ஐ.சி.ஆர்.சி. வழித்துணையுடன் வன்னிக்கு கடல் வழியாக உணவுப் பொருட்களை அனுப்புவது குறித்து ஆராய்வு

ship.jpgவன்னிக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களை அனுப்புவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. வன்னிக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கடந்த மாதம் 16 ஆம் திகதிக்குப் பின்னர் சுமார் ஒரு மாதமாக கொண்டு செல்லப்படாததால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிக்கக் கூடிய பாதுகாப்பான இடங்கள் இல்லையெனவும் அரசு தரப்பு கூறிவந்தது. இதனால் சுமார் ஒரு மாதமாக உணவுப் பொருட்கள் எதுவும் அங்கு அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் அண்மையில் முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்பகுதியிலிருந்து யுத்தத்தால் படுகாயமடைந்த சுமார் 700 பொதுமக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதனையடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கடல்மார்க்கமாக வன்னிக்கு உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பது பற்றி அரச உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. திருமலை துறைமுகத்திலிருந்து செஞ்சிலுவைச் சங்க கொடியினை தாங்கிய கப்பலில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவு புதுமாத்தளன் கடல் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை இறக்கி கரைக்கு கொண்டு செல்வதற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உதவியும் கோரப்படவுள்ளது.

வவுனியாவில் உள்ள உலக உணவுத்தாபனத்தின் களஞ்சியத்தில் வன்னிக்கு அனுப்புவதற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. ஆனாலும் பொதுமக்கள் உள்ள பகுதிக்கு செல்ல வவுனியாவிலிருந்து 80 கிலோ மீற்றர் தூரத்தை கடக்கவேண்டியுள்ளது. புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதிகளிலேயே அதிகளவான பொதுமக்கள் உள்ளனர். தரை வழியாக அங்கு லொறிகளில் உணவுப் பொருட்களை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்ணிவெடிகள் வீதிகளில் புதைக்கப்பட்டுள்ளதால் பெரும் ஆபத்தான பிரதேசமாகவுள்ளது. நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லும் ஐக்கிய நாடுகள் சபை பணியாளர்களுடைய பாதுகாப்பு முக்கியமாகக் கருதப்படுகின்றது. எனவே தான் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களை அனுப்புவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *