இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பொதுப்பிரதேசத்திலும், விசுவமடு பிரதேசத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், இந்த மோதல்களின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலின்போது இராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வெடிப்பொருட்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறியிருக்கின்றது.
இதனிடையே, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கு இதுவரையில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பதினொரு பாடசாலைகள் உட்பட உயர் கல்வி நிலையங்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகப் படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளி்ன் பிரதேசத்தில் தொடர்ந்து எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் பலர் கொல்லப்படுவதுடன் காயமடையவும் நேரிட்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.