அமெரிக்காவில் புதிதாக கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு தலா 100 டொலர்களை (சுமார் 20,000 இலங்கை ரூபா) வழங்குமாறு அமெரிக்காவின் உள்நாட்டு அரசுகளை ஜனாதிபதி ஜோ பைடன் கோரியுள்ளார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர் இவ்வாறு கோரியுள்ளார்.
அத்துடன், அமெரிக்க சமஷ்டி அரச ஊழியர்களுக்கு தடுப்பூசி தொடர்பான புதிய அறிவுறுத்தல்களையும் அவர் விடுத்துள்ளார்.
சமஷ்டி அரச ஊழியர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் அல்லது கட்டாய சோதனைக்கு உட்படுவதுடன் முகக்கவசம் அணிய வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மக்கள் தொகை சுமார் 33 கோடியாகும். இவர்களில் 16.38 கோடி பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டின் தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மத்திய நிலையத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.