ஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தாதியர், மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் உரையாற்றிய மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யா, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதியான அரசியல் தீர்வை உருவாக்க இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மீது குண்டு வீசும் கொடும் செயலை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு இசைவளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். போரால் படுகாயம் அடைந்த தமிழர்களுக்கு இலங்கை சென்று மருத்துவம் மேற்கொள்வதற்கு மருத்துவ மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் திவ்யா கூறினார்.
palli
நிதானமான போராட்டம். தேவையான கோரிக்கை. உடனடியாக செயலாக்க வேண்டியது. இதை தமிழகத்தில் அனைவரும் செர்ந்து மத்திய அரசிடம் கேக்கலாம். தமிழக அரசியல்வாதிகள் கூட மாணவர் கோரிக்கைகளை பின்பற்றினால் பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.