உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற நாளன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முவாத் என்ற தற்கொலை குண்டுதாரியின் தந்தையான அஹமத் லெப்பே அலாவுதீன் என்பவர் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல நேற்றைய தினம் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
குறித்த சந்தேக நபருக்கு எதிராக தொடர்ந்து விசாரணை முன்னெடுத்து செல்ல போதிய சாட்சிகள் இல்லை என குற்ற விசாரணை பிரிவு தரப்பில் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதால் குறித்த சந்தேகநபர் எல்லா குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருந்தது. சந்தேக நபருக்கு எதிராக சாட்சிகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பதால் அவர் மீதான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு அறிவித்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் இவ்விடயம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.