இலங்கையில் கொரோனா பற்றிய அச்சம் வேகமாகப் பரவுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட உலகம் முழுவதுமே கொரோனாவின் பிடியினுள் சிக்கி இருந்தாலும் இலங்கையில் அதன் தாக்கம் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிட்-19 மரண எண்ணிக்கை நூறை எட்டியுள்ள நிலையில் மிகைப்படுத்தப்பட்ட அச்சம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.
இலங்கையில் வெளிநாட்டு போக்குவரத்து தொடர்புகள் அதிகம் காணப்படும் மேற்கு மாகாணமே கூடுதலாக கோவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
அண்மைய நிலைதொடர்பாக கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண மருத்துவர், தற்போது சம்பவிக்கும் கோவிட் மரணங்களில் 90 வீதமானவை 55 வயதுக்கும் மேற்பட்டவர்களில் ஏற்படுவதாகவும் 75 வீதமான கோவிட் மரணங்கள் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தவறியவர்கள் மத்தியிலேயே ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் வேறு மருத்துவ கோளாறுகள் உள்ளவர்கள் மத்தியிலும் மரணங்கள் சம்பவித்து உள்ளது.
ஹட்டனில் எனது நண்பனுடைய மருமகள் 39 வயதுடையவர் கோவி-19 இனால் மரணமுற்றார். இவருக்கு ஏற்கனவே விழுந்ததால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சையின் போது கோவிட்-19 தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்தது. கிளிநொச்சி இரத்தினபுரத்தில் வாழும் எனது நண்பனின் சிறிய தந்தை க.மகேந்திரராஜா – (படம்) கோவிட்-19 தொற்றினால் காலமானார். எழுபது வயதினை எட்டும் அவர் நீண்டகால வருத்தங்களைக் கொண்டிருந்தவர்.
மேலும் இலங்கையில் பிணவறைகள் நிறைந்துவிட்டன, வீதிகளிலும் மரணம் சம்பவிக்கலாம் போன்ற பரபரப்பு தகவல்கள் ஆரோக்கியமானவையல்ல. இலங்கையில் சாதாரண காலங்களிலேயே கொரிடோர்களில் வைத்தே நோயாளிகள் சிகிச்சை பெறும் சம்பவங்கள் நடைபெறுவது வழமை. மேலும் இந்தியா போன்று இலங்கையில் மரணங்களையோ ஏனைய சுகாதார புள்ளிவிபரங்களையோ அரசால் கட்டுப்படுத்துவது கடினமானது என்றும் அவ்வாறான இருட்டடிப்புகளுக்கு வாய்பு குறைவு என்றும் அம்மருத்துவர் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் அச்சத்தைத் தவிர்த்து பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இலங்கையில் கோவிட்-19 வேகமாகப் பரவுகின்ற போதிலும் மீண்டும் ஒரு லொக்டவுன் பொருளாதார நெருக்கடியையும் வேறு நெருக்கடிகளையும் தோற்றுவிக்கும் என்பதால் அரசு இன்னுமொரு லொக்டவுனை தவிர்க்கவே விரும்புகின்றது. தற்போது சீன அரசின் வக்சீன் பரவலாக போடப்பட்டு வருகின்றது. 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வக்சீன் போடுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்து. மேலும் இவ்வாண்டுக்கு உள்ளாக நாடு முழுவதும் வளர்ந்தவர்களுக்கான வக்சீன் போடப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 12 வயதுவரையானவர்களுக்கும் வக்சீன் போடப்படுவது பற்றி அரசு ஆராய்ந்து வருகின்றது.
ஆபிரிக்க நாடுகளில் வயதானவர்களுக்கே வக்சீன் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. அங்கு நாட்டின் ஒரு வீதமான மக்களுக்குக் கூட வக்சீன் வழங்கப்படாத நிலையில் அந்நாடுகள் பாரிய அச்சத்தை எதிர்கொண்டு வருகின்றன.