“ வடுக்கள் இருந்தாலும் இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம்..” – நாடாளுமன்றில் அடைக்கலநாதன் !

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர்.  வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

 

ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிப்படுத்த முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பாராளுமன்றில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாங்கள் பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்கத்தின் தலைவரான ஸ்ரீசபாரத்தினத்தினை கொலை செய்தார்கள். இது உலகறிந்த உண்மை.

பாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு புதிதாக சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. நாங்கள் ஏற்கனவே அதனை சொல்லியிருந்தோம்.  விடுதலைப் புலிகள் இருக்கின்ற போதும் நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றோம். உண்மையை நாம் மறக்க முடியாது. இதனை நாம் வெட்ட வெளிச்சமாக சொல்லிக் கொள்கின்றோம்.

வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றினோம்.

இதேவேளை போராட்டத்தின் உச்சகட்டத்தில் இலங்கை அரசாங்கம் போராடிக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் விடயத்தில்  கடந்த காலங்களில் இந்த அரசாங்கம் மெத்தனப்போக்கினை காட்டியமையினாலேயே இந்த நிலமை உருவாகியுள்ளது.

மக்களை பாதுகாப்பதில் இருந்து அவர்கள் தவறியிருக்கின்றனர். வைரஸை தடுப்பதற்காக களனிப்பாலத்தில் முட்டிகளை போட்டு மூடநம்பிக்கைகளை கொண்டுள்ளவர்களை இந்த அரசாங்கம் அமைச்சர்களாக வைத்துள்ளது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் மெத்தனப்போக்கினையே காட்டி வருகின்றது.

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் வடக்கில் நடக்கும் போது தென்னிலங்கையில் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்கள். ஆனால் இன்று தென் இலங்கையில் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது.  இவ்வாறான சம்பவங்களை யாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்பது எனது கருத்து என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *