ஆசிரியர்கள் மீதும் கை வைத்ததில்லை என்றும் இனிமேலும் கை வைக்கப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குடிவரவுகுடியகல்வு சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டில் இப்போது பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறான ஆர்ப்பட்டங்களால் பொலிஸ் அதிகாரியொருவர் விரல்கள் இரண்டை இழந்துள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சியினர் இதுவரையில் குறித்த விடயம் தொடர்பாக கண்டணத்தையோ அல்லது கவலையையோ வெளியிடவில்லை. நல்லாட்சி காலத்தில் நீர் தாரைப் பிரயோகம், கண்ணீர் புகைத்தாக்குதல், தடியடி பிரயோகம் என்பன நடத்தப்பட்டது.
ஆனால் நாங்கள் ஒரு ஆசிரியர் மீதும் கை வைத்ததில்லை, கை வைக்கப் போவதும் இல்லை. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய எங்களை தாக்கினாலும் பொறுமையாக இருக்குமாறே பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.