ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான சத்தியமூர்த்தி கடந்த 12 ஆம் திகதி இலங்கைப் படையினரின் எறிகணை வீச்சுத் தாக்குதல்களில் படுகாயமடைந்து மரணமடைந்தமை தெரிந்த விடயமே. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சத்தியமூர்த்தி நீண்டகாலமாக பல பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தியளிக்கை மற்றும் பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறுகதை மற்றும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழீழம் அல்லது சுதந்திரமான தமிழ் தாய்நாடு தொடர்பில் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவர் தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தார். எனினும் சத்தியமூர்த்தி கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் எந்தத் தரப்புக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டதில்லை என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர். மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்டிருந்தார். இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார்.
ஆயுத மோதல்களின் போது, ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படுவது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைய வன்முறையாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 1738வது தீர்மானத்தின் அடிப்படையில் மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் பணிப்புரியும் ஊடகவியலாளர்களை அங்கீகரித்து, பொதுமக்கள் மற்றும் ஆயுதம் தரிக்காதவர்களைப் பாதுகாக்குமாறு தாம் மீண்டும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. சத்தியமூர்த்தியின் அரசியல் பார்வை எதுவாக இருந்த போதிலும், அவர் இலங்கையின் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான போர்க்களப் பகுதியில் ஆபத்தான ஊடகப் பணியை மேற்கொண்டிருந்தாக சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஹெய்டன் வைய்ட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் மரணம் குறித்து விசாரணைகளை நடத்தி, அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயப் பகுதியில் எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்;டுள்ளார்.
அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கையில் உள்ள உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடக அமைப்புகளை அச்சுறுத்தும் வகையிலான முனைப்புகளை மேற்கொண்டு போர் தொடர்பான சுயாதீன தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வழிகளை அடைத்துள்ள நிலையிலேயே சத்தியமூர்த்தியின் மரணம் சம்பவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் 12க்கும் மேற்பட்ட இலங்கை ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர். மிக நீண்டகால சிவில் யுத்தத்தில் அரசாங்கம் அதிகளவான வெற்றிகளை பெற்றும் வரும் வேளையில் இலங்கையின் ஊடக சுதந்திர சூழல் படிபடியாக சீர்குலைந்து வருவதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக விடுதலைப் புலிகளால் மதிப்பளிப்பு
படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி.
தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த் தேசிய ஊடகப்பணியை தொடக்கிய பு.சத்தியமூர்த்தி புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை வளர்த்தெடுக்கும் ஊடகப்பணியை தாயகத்தில் இருந்து செய்து வந்தார். புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது ஊடகப்பணி ஊடாக பு.சத்தியமூர்த்தி செய்து வந்தார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது ஊடகப்பணியை நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் அவலங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் உயிரை சிங்களப் பேரினவாதம் பறித்துள்ளது. தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பு.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் புலனாய்வுத் துறையினரால் விசாரணை:
இதே நேரம் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட் படுத்தப்பட்டதாகவும் சில இணையத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயன் சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளன. நேற்று புலனாய்வுபிரிவின் அலுவலகத்தில் (6ம் மாடியில்) சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று திங்கக்கிழமை உதயன், சுடரொளி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கொழும்பிலுள்ள புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் 6 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விசேட பிரிவிற்கமைய இந்த விசாரணைக்கு சமுகமளிக்குமாறு புலனாய்வுப் பிரிவினரால் வித்தியாதரனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக அவர் இந்த விசாரணைகளில் கலந்து கொண்டதாகவும் தெரிய வருகின்றது.
இந்த விசாரணையின் போது வன்னியில் கொல்லப்படுகின்ற மக்கள் படையினரின் எறிகணை வீச்சுகள் மற்றும் விமானத் தாக்குதல்கள் என்பவற்றினால் கொல்லப்படுவதாக செய்திகளை வெளியிட்டமை ,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உரை பிரசுரிக்கப்பட்டமை மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புடனான உறவு நிலை போன்ற விடயங்கள் விசாரிக்கப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரம் கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் ரி.தனபாலசிங்கம், கடந்த வெள்ளிக் கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது.
கடந்த 12 ஆம் திகதி வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நாடாளுமன்ற உரையொன்று தொடர்பில் வெளியான செய்தி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பில் நாடாளுமன்ற குறிப்பேட்டுடன் ஆராய்ந்து பார்க்குமாறு புலனாய்வுதுறையினரிடம் தனபாலசிங்கம் கூறியுள்ளார். அதில் எதுவும் தவறு இருந்தால் அதற்கு தான் பொறுப்பு எனவும் தனபாலசிங்கம் புலனாய்வுத்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் – உலக பத்திரிகைகள் ஒன்றிய அறிக்கை.
2008ஆம் ஆண்டு 70 ஊடவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் கொல்லப்பட்டதில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என உலக பத்திரிகைகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்க்கு அச்சுறுத்தலான நாடுகளில் ஈராக் முதல் இடத்தில் உள்ளது கடந்த வருடம் ஈராக்கில் மாத்திரம் 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இந்த எண்ணிக்கை கடந்த 2007ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 44ஆக இருந்த ஊடகவியலாளர்களின் உயிரிழப்புக்கள் 14ஆகக் குறைவடைந்துள்ளது என அந்த அமைப்பு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆனாலும் ஈராக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் வீதியோரக் குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடுகள், கடத்தல்கள் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் ஏனைய நாடுகளிலும் ஊடகவியலாளர்களின் படுகொலைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஊடகவியலாளர்களுக்கு அடுத்த மோசமான நாடு எனக் கூறியுள்ளது. இந்த நாடுகளில் 2008ஆம் ஆண்டு தலா 7 ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டிருப்பதுடன், பிரிப்பைன்சில் 6 ஊடகவியலாளர்களும், மெக்சிக்கோவில் 5 ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போதே ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு 95 பேரும், 2006ஆம் ஆண்டு 110 பேரும், 2005ஆம் ஆண்டு 58 பேரும், 2004ஆம் ஆண்டு 72 பேரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கடந்த வருடம் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உலக பத்திரிகைகள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருட்சல்வன் வி
டென்மார்க்கில் ஈகஸ்ர் , வைல , சிலேல்ஸ , கிறின்ஸ்ரர் ஆகிய நகரங்களில் தாயகமக்களுக்காக தன்னுயிர் நீத்த நாட்டுபற்றாளர் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி , மாவீரன் முருகதாஸ் ஆகியோருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான மக்கள் கூடி நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மற்றும் சுவிஸ் யெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைமுன்றலில் ஐக்கியநாடுகளை இலங்கைத்தமிழர் பிரச்சனையில் உடனடியாகத்தலையிடுமாறு கோரிக்கைகளை முன்வைத்து தனது இன்னுயிரை நீத்த மாவீரன் முருகதாசன் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு தமது வீரவணக்கங்களை செலுத்தினார்கள். கூடியிருந்த மக்கள் மெழுகுவர்த்திகள் ஏற்றியும் உருவப்படத்திற்கு மலர்கள் தூவியும் கனத்த மனதுடன் கண்ணில் நீர் முட்ட வீரவணக்கம் செலுத்தினார்கள்.
chandran.raja
புலம் பெயர்ந்த விசுக்கோத்துக்கள் ஒன்றுக்கும் நாட்டுப்பற்றில்லையா?
நாட்டுப்பற்று விசுக்கோத்துக்களாலேயே நாட்டைவிட்டு ஓடிவந்துதோம். அல்லது நாமும் மண்னெணையை தலையிலை ஊற்றி பற்றவைத்துத் தான் எம்மை நாம் “நாட்டுபற்றாளர்” ஆக விளம்பரப்படுத்த வேண்டுமா? என்னப்பா உலகம்? என்னப்பா இந்த தமிழன் ?.
புலிவிசுவாசத்தை இப்படி கொக்கி போட்டு இழுத்து நிறுத்தியா காட்டவேண்டும் !.
Kullan
இலங்கைத் தமிழருக்காகத் தற்கொலை செய்த முருகதாஸ் மாவீரன். இந்தியாவில் தற்கொலை செய்த இரவி மலேசியாவில் தற்கொலை செய்தவார்கள் எல்லாம் என்னமாதிரி? இலண்டனில் தற்கொலை செய்ய முயற்சித்து தப்பி அரை மாவீரனாக்கும்
தயவுசெய்து புலியாதரவாளர்களும் புலிப்பினாமிகளும் தற்கொலை செய்யுங்கள் மாவீரர்கள் ஆகலாம். நாம் ஈகைச்சுடர் ஏற்றுகிறோம் ஐரோப்பியத் தெருக்களில். கடசிவரையும் வாழ்வேன் வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் போராடும் சித்தெறும்புகளுக்குரிய மனவைராக்கியம் இல்லா தற்கொலையாளர்கள் இவ்வுலகில் வாழத்தகுதியற்றவர்கள்தான். செத்துப்போங்கள் உங்கள் தலைவன் சொற்படி. மக்கள் தலைவர்கள் மக்களுடன் இருக்கமாட்டார்கள் பங்கருக்குள் சுகபோகம் அனுபவிப்பார்கள். மாவீரர்கள் போராடமாட்டார்கள் தற்கொலை செய்வார்கள் இது புலிகளின் புதிய வரைவு இலக்கணம்.
வெளிநாடுகளில் தற்கொலை செய்பவர்கள் நாட்டுக்குப்போய் துப்பாக்கி எடுத்துப் போராடுங்கள். இங்கே உங்கள் தலைவனுடனும் படையுடனும் இருக்க இயலாது என்றுதானே இங்கே வந்தீர்கள். பின்பு என்ன தற்கொலை வேண்டி இருக்கிறது. உங்களைப்பார்த்து எங்கள் சின்னங்சிறிசுகளும் உங்களைப் போல் கோழைகளாகத் தற்கொலை செய்ய முயல்வார்கள்.உங்களை யாரும் இங்கே இழுத்துப் பிடிக்கவில்லை.
முருகதாஸ் என்ற தற்கொலைதாரி கடசி மட்டும் இலண்டன் திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் தான் தாயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் வருவதாகச் சொன்னார். அடுத்தநாள் மக்கள் அதிகமில்லாத நேரத்தில் தற்கொலை செய்திருக்கிறார். இவர் புலிகளின் துண்டலில்தான் தற்கொலை செய்தார் என்பது பலரது முடிவு. தயவுசெய்து ஐரோப்பியப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் புலிகள் நெருங்காமல் பார்த்துக் கொள்ளுமங்கள். இல்லையேல் முருகதாஸ்சின் பெற்றோருக்கு எற்பட்ட நிலைதான் உங்களுக்கும்.
பகீ
கருத்தாளர்களே இங்கே உள்ள தலைப்பில் உள்ளது…
“ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்திய மூர்த்தியின் மரணம் தொடர்பான விடயத்தை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது” என்பதாகும்.
இதில் உங்கள் கருத்து என்ன. இக்கோரிக்கை சரியா பிழையா அவ்வாறாயின் ஏன், எதற்காக எனச் சொல்வதை விட்டு தற்கொலை… தூண்டுதல்.. விசுக்கோத்து என ஏன் அலம்புகிறீர்கள்?
பகீ
கொலை செய்யப்பட்ட லசந்தா விக்கிரமதுங்காவின் மனைவியின் பேட்டி
http://www.youtube.com/watch?v=GApzsh_tkTA
ashroffali
ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி வேண்டுமென்றே அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்படவில்லை. இராணுவத்தினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல் ஒன்றின் போதே காயமடைந்து மரணமடைந்தார்.
தவிரவும் சத்தியமூர்த்தியின் பொறுப்பிலிருந்த வன்னியின் மீடியா ஹவுஸ் தான் புலிகளின் ஒளிப்படங்களை வெளியிட்டுவந்தது. புலிப் போராளிகளின் போர்க்கள நகர்வுகளை தாக்குதல்களை வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு காட்டி பணம் பண்ண வழி செய்தது.அந்த வகையில் சத்தியமூர்த்தி அவர்கள் புலிகளுடன் மோதல் நடைபெறும் இடங்களில் நின்று புலி ஆதரவாக செய்தி சேகரித்தவர் என்பது வன்னியிலிருந்து கிடைத்த ஆதாரபூர்வமான தகவலாகும். அவர் காயம் பட்ட அன்றும் அப்படி போர்முனையில் நின்றிருக்கையில் தான் காயம் பட்டுள்ளார். அந்த வகையில் அவரை மோதல் நடைபெறும் இடத்துக்குச் சென்ற புலிகள் தான் அவரது மரணத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும். வெறும் நாட்டுப்பற்றாளர் பட்டம் அதற்குப் போதுமானதாக இல்லை.