வன்னியில் மோதலில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இராணுவ நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்கள் அமைப்பொன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிய பகுதியில் அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக குறிப்பிட்ட கால வரையறைக்குள் உடனடியாக ஒருதலைப்பட்சமாக மோதல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் கேட்டிருப்பதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திகள் தெரிவித்தன.
அத்துடன், பலவந்தமாக பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பொது மக்களை விடுவிக்குமாறு சர்வதேச சமூகம் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் சமாதானத்திற்கான தமிழர் மன்றம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இழப்புகள் அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
“விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்புக்காக அவர்களை வைத்திருக்கக்கூடும். ஆனால், இது தொடர்பான சர்வதேசத்தின் அபிப்பிராயம் தங்களின் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பும் என்று சமாதானத்திற்கான தமிழர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மோதல் இடம்பெறும் பகுதிகளிலுள்ள சகல பொதுமக்களின் பாதுகாப்பும் முக்கியமானதாகும். அத்துடன், அவர்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான தார்மீக உரிமை இந்த நிலையில் உண்டு. தங்களின் தரப்பில் அந்த நடவடிக்கையானது நம்பிக்கையை ஏற்படுத்த உதவும். நீங்கள் புலிகளுடனேயே போரிடுகிறீர்கள். தமிழ் சமூகத்திற்கு எதிராக அல்ல என்பது குறித்தும் தமிழ் மக்களின் துன்பம் தொடர்பாக மனிதாபிமான ரீதியான கரிசனையை மனதில் அதிகளவுக்கு கொண்டுள்ளீர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.