தலிபான்கள் என்னை கொலை செய்ய வருவார்கள் என்று ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள்ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் இனி சண்டை நடக்காது, அமைதி நிலவும். இஸ்லாம் விதிகள்படி பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்த நிலையில் தலிபான்கள் உயிருக்கு ஆபத்து என்று ஆப்கனின் முதல் பெண் மேயர் சரிஃபா கஃபாரி (27) தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சரிஃபா கஃபாரி கூறும்போது, தலிபான்கள் இங்கு வருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னை கொல்ல வருவார்கள். எனக்கும், எனது குடும்பத்திற்கும் உதவ யாரும் இல்லை. நான் எங்கு செல்வேன்.
கடந்த காலங்களிலும் தலிபான்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். முன்று முறை என்னை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் அந்தக் கொலை முயற்சிகளிலிருந்து தப்பிவிட்டேன்” என்றார்.