“நாட்டை விட்டு வெளியேறும் போது ஒரு ஜோடி ஆடைகளும், உள்ளாடைகளும், ஒரு செருப்பும் மட்டுமே எடுத்துச் சென்றேன்.” – அஷ்ரப்கனி விளக்கம் !

தலிபான்களுக்கு அஞ்சி பெட்டி, பெட்டியாக பணத்துடன் நான் தஜிகிஸ்தானுக்கு ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுவை அனைத்தும் பொய்யான தகவல் என்று பதவி விலகிய ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கனி விளக்கம் அளி்த்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்து வெளிேயறத் தொடங்கியபின், மிகவிரைவாக ஆப்கானை தங்கள் வசம் தலிபான்கள்  கொண்டுவந்துள்ளனர்.

காபூல் நகருக்குள் தலிபான்கள்வந்துவிட்டதை உறுதி செய்த ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளிேயறி தஜிகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமல்லாமல் அவர் வெளியேறும் போது 4 கார்கள் நிறைய பணத்தை எடுத்துச் சென்றதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தளம் தெரிவித்தது.

அதன்பின் அஷ்ரப் கானி தனது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ஆயுதங்கள் ஏந்திய தலிபான்கள் அல்லது 20 ஆண்டுகாலம் என் உயிரைக் காப்பாற்றிய அன்புக்குரிய தேசத்தை விட்டுச் செல்வதா என்ற ஊசலாட்டம் இருந்தது.

ஆனால், தலிபான் தீவிரவாதிகள் கத்தியின், துப்பாக்கி முனையில் நாட்டை வைத்துள்ளார்கள். அவர்களால் நாட்டு மக்களின் மனதை வெல்ல முடியாது. நான் வெளியேறாவிட்டால், ஏராளமான மக்கள் கொல்லப்படுவார்கள், காபூல் நகரம் சின்னபின்னாகும், மிகப்பெரிய மனிதப்பேரழிவு நிகழும், 60 லட்சம் மக்கள் வாழும் நகரம் ரத்தக்களறியாகும். காபூல் நகரை ரத்தக்களரியாக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி ஹெலிகாப்டரில் தப்பித்து தஜிகிஸ்தான் செல்லவி்ல்லை ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். இதை ஐக்கிய அரபு அமீரகம் அரசே தகவல் தெரிவித்து, மனித நேயஅடிப்படையில் அஷ்ரப் கனி தங்கவைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்முறையாக அதிபர் அஷ்ரப் கனி பேஸ்புக்கில் வீடியோவில் தன்னுடைய நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் 4 சூட்கேஸ் நிறைய டாலர்கள் அதாவது அரசின் 16.90 கோடி அமெரிக்க டாலர்களுடன் நான் ஹெலிகாப்டரில் தப்பித்துவிட்டதாகக் குற்றச்சாட்டு வெளியானது. அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. நான் ஆப்கானிஸ்தானை விட்டுச் செல்லும்போது என்னுடன் ஒரு ஜோடி ஆடைகளும், உள்ளாடைகளும், ஒரு செருப்பும் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுவிட்டது என்று கூறுவதும் முற்றிலும் பொய்யான தகவல்

நான் தஜிகிஸ்தானில் இல்லை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கிறேன்.என்னுடைய அரசியல் வாழ்க்கையையும், என்னுடைய குணத்தையும் அழிப்பதற்காகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருவது தொடர்பாக பேச்சு நடத்திவருகிறேன் விரைவில் நாடு திரும்புவேன். ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமைதிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால்தான்,  தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் நான் தொடர்ந்து தங்கியிருந்தால், காபூல் நகரம் சிரியா, ஏமன் போன்று மாறியிருக்கும். நான் தொடர்ந்து அதிபராக இருந்திருந்தால், அப்பாவி மக்கள் என் கண்முன்னே தலிபான்களால் தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பார்கள். இது நம்முடைய வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக இருக்கும்.

இதுபோன்று இறப்பதற்கு நான் அஞ்சவில்லை, ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு அவமதிப்பு வருவதை நான் ஏற்கமாட்டேன். ஆப்கானிஸ்தான்  ரத்தக்களரியாக மாறுவதைத் தவிர்க்கவே நான் நாட்டைவிட்டு வெளியேறினேன்.

நாட்டின் அரசியல் நிலையை சீர் செய்ய முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய், தலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு நான் ஆதரவாக இருக்கிறேன்.

இவ்வாறுஅஷ்ரப் கனி  தெரிவித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *