பொது மக்களை பலவந்தமாகப் படைக்குச் சேர்ப்பதை புலிகள் இயக்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதிலும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்போது இலக்கு வைக்கப்படுவதாகவும் ‘யுனிசெப்’ நிறுவனம் குற்றஞ் சாட்டியுள்ளது.
இதனால் மோதல்களில் சிறுவர்கள் கொல்லப்படுவதும், காயமுறுவதும் அதிகரித்துள்ளதாகவும் ‘யுனிசெப்’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுஹமலே கவலை தெரிவித்துள்ளார். சிறுவர்கள் நேடியான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் பாரிய உயிராபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் ‘யுனிசெப்’ விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுவர்களைப் பலவந்தமாகப் படைக்குச் சேர்ப்பது சகித்துக்கொள்ள முடியாதது என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
“2003 ஆம் ஆண்டிலிருந்து 2008 இறுதிவரை ஆறாயிரம் சிறுவர்களை புலிகள் படைக்குச் சேர்த்திருந்தனர். சிறுவர் போராளிகள் உடல் ரீதியான இம்சைகளுக்கு உள்ளாவதுடன், அதிர்ச்சியடையும் வேளைகளில் மரணத்தைத் தழுவுகின்றனர். அவர்களின் பிள்ளைப் பராயத்தில் நம்பிக்கைக்குப் பதிலாக அச்சமே குடிகொண்டிருக்கிறது” என்று யுனிசெப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் காயமடைந்து வருவதாக எச்சரித்துள்ள யுனிசெப் நிறுவனம், இவ்வாறு காயமுற்ற சிறுவர்கள் கடந்தவாரம் அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
“இந்தப் பிரச்சினையில் சிறுவர்களே கொல்லப்பட்டும், காயமுற்றும், படைக்குச் சேர்க்கப்பட்டும், இடம்பெயர்ந்தும், தனிமைப்படுத்தப்பட்டும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். மோதல்கள் காரணமாக அவர்களின் நாளாந்த தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ள யுனிசெப் பிரதிநிதி மோதல்களிலிருந்து பொதுமக்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும் என்று புலிகள் இயக்கத்தையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தியுள்ளது.
“மோதல் பிரதேசத்திலிருந்து வெளியேறிவந்துள்ள 30 ஆயிரம் மக்களுக்கு யுனிசெப் நிறுவனமும் ஏனைய ஐ.நா. அமைப்புகளும் இணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.
எனவே இவ்வாறு துரிதமாக உதவி பெறக்கூடிய பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அனைத்துப் பொதுமக்களும் வர வேண்டியது மிக முக்கியமானது” என்றும் யுனிசெப் மேலும் தெரிவித்துள்ளது.