ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-ந்திகதி முதல், அங்குள்ள தனது குடிமக்களை அமெரிக்கா வெளியேற்றி வருகிறது.
திங்கட்கிழமை காலை தொடங்கி நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், மிக அதிக அளவாக 21 ஆயிரத்து 600 பேரை வெளியேற்றி இருக்கிறது. 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8 ஆயிரத்து 900 பேரும் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, 16 ஆயிரம்பேர் அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்களை வெளியேற்றும் பணியை 31-ந்திகதிக்குள் முடிக்க வேண்டும், கெடு நீட்டிப்பு கிடையாது என்று தலீபான்கள் கூறிவிட்டதால், மீட்புப்பணியை அமெரிக்கா விரைவுபடுத்தி உள்ளது.
இதே நேரம் , ஆப்கானிஸ்தானில் இருந்து திறமையானவர்களை வெளியேற்றக் கூடாது என அமெரிக்காவை தலிபான்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்,
பொது மன்னிப்பை ஏற்கனவே அறிவித்துள்ளதால், எந்த நபரையும் குறிவைக்கவில்லை. மேலும் ஆப்கானிஸ்தான் மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் நன்கு படித்தவர்களை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டாம் என ஜபிஹூல்லா அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டார்.