தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இலங்கைப் படையினரால் நேரடியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்குடா நாட்டின் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகின்ற தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகள் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் மக்கள் டிவி நிகழ்ச்சிகளை மட்டும் மறு ஒளிபரப்புச் செய்வதற்கு ராணுவம் தடை விதித்துள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை உடனுக்குடனும் மக்கள் டிவி காட்டுவதே ராணுவத்தின் கோபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. இந்தப் பிரதேசத்தில் சன் டிவி மறு ஒளிபரப்பு தொடர்ந்து நடக்கிறது.
இது தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் அ. சிவகுமார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை, பலவிதமான ஆய்வுகளும், அமைப்புகளும் பாராட்டியுள்ளன. ஊடகநெறியை மீறாமல் உலகத் தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மைநிலையை மட்டும் விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால், இலங்கை இராணுவம் மக்கள் தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது.
மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை நெரித்துவரும் இலங்கை அரசின் சர்வாதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி.பி.சி. உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் மக்கள் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஒரு சான்றாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளத இலங்கையில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குநர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும், சக ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்யவேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும், ஊடகநெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
palli
மருத்துவர் ஜயா இது உங்களுக்கு தன்மான பிரச்சனை. மகன் இந்திய மத்திய மந்திரியாக இருப்பது தெரிந்தும் இலங்கை அரசு தங்களை சீண்டுகுதோ???