இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்!

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்ிய வகையில் இடதுசாரிப் பாரம்பரியத்தோடு செயற்படுகின்ற ஒரே கட்சியான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளும் கொரோன காலத்து குழுவாத சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளன. தனிநபர் குழுவாத முரண்பாட்டால் கட்சியின் உறுப்பினர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார். அதற்கு முன்னரும் பின்னரும் இக்குழுவாத போக்கு காரணமாக கட்சியில் இருந்து சிலர் வெளியேறியும் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பும் இக்குழுவாத போக்கிற்குள் இழுத்துவிடப்பட்டு உள்ளது.

இவ்விரு கட்சிகளுமே சராசரி மக்களைப் பொறுத்தவரை முகவரியற்ற கட்சிகளாக இருந்த போதும் நுண் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட அமைப்புகள். அமைப்பு வடிவத்தில் இயங்குகின்ற போராட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புகள். புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி இலங்கை தமிழர்கள் மத்தியில் பல போராட்டங்களை நடத்திய வரலாற்றைக் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன் கிந்துசிட்டி மயானப் போராட்டம் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் ஒரு பலமான குரலாக இருந்து வருகின்றது. அதேபோல் பிரித்தானியாவில் தமிழ் சொலிடாரிட்டி அகதிகள் உரிமை, தொழிலாளர் உரிமை போன்றவற்றிற்காக பிரித்தானியாவில் உள்ள ஏனைய இடதுசாரி மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராடி வருகின்றது. இவ்வமைப்புகள் மீது பல விமர்சனங்கள் இருந்த போதும் அமைப்பு வடிவில் இயங்குகின்ற இடதுசாரி நிலைகொண்ட அமைப்புகள் இவையிரண்டுமே.

உங்களுக்கு தெரிந்த வலதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று சொன்னால் அந்தப் பட்டியல் மிக மிக நீண்டு செல்லும். ஆனால் உங்களுக்கு தெரிந்த இடதுசாரிகளை அடையாளம் காட்டுங்கள் என்று கேட்டுப் பாருங்கள். ஓரிரு பெயர்களை முன் வைத்ததுமே ‘அவரை இடதுசாரி என்று யார் சொன்னது? என்ற கேள்வி வெவ்வேறு திசைகளில் இருந்து வரும். ‘தோழர்’ என்று பெயருக்கு முன் போட்டால் இடதுசாரியா? ‘மார்க்ஸ், லெனின், கார்ள் மார்க்ஸ்’ படத்தை முகநூல் வட்ஸ் அப் ப்ரோபைலில் போட்டால் இடதுசாரியா? மார்க்ஸ் படம் போட்ட தேநீர் கப்பில் ரீ குடித்தால் இடதுசாரியா? இப்படி ஆளுக்கு ஒரு அடையாளத்தோடு நான் கொம்னிஸ்ட், நான் சோசலிஸ்ட், நான் லெப்டிஸ்ட் என்ற தோரணையோடு பலர் உலாவருகின்றனர்.

இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர்கள் மிகச் சிறுபான்மையினராகவே உள்ளனர். வலது சாரிக் கருத்தியலுடன் ஒப்பிடுகையில் இடதுசாரிகள் முற்போக்கானவர்களாகவும் சக மனிதர்களை மதத்தவரை இனத்தவரை ஒடுக்கப்பட்ட சாதியினரை பெண்களை மதிப்பவர்களாக இருந்த போதிலும் பல்வேறு காரணங்களாலும் இக்கருத்தியல் பிரிவினரின் கருத்தியல் பிரதான அரசியல் சமூக நீரோட்டத்தில் இல்லை. அதற்கு தங்களை இடதுசாரிகளாக காட்டிக்கொள்ளும் பலரின் தனிமனித நேர்மையின்மையும் முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே தனிப்பட்ட ஆண் – பெண் உறவை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அரசியலையும் அவர்கள் சார்ந்த அரசியல் அமைப்புகளையும் மலினப்படுத்தும் போக்கு இக்கொரோனா காலத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதற் களப்பலியானவர் புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் நன்கு அறியப்பட்ட உறுப்பினர் மு மயூரன். இவ்வாண்டு மார்ச் 21 கட்சியின் அரசியற் குழு வருமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மு மயூரன் பெண்களுடன் முறைகேடாக நடந்துகொண்டுள்ளார்; என்ற குற்றச்சாட்டுக்கள் கட்சிக்கு முன்வைக்கப்பட்டதாகவும் மு மயூரன் முன்வைத்த விளக்கங்கள் நம்பகத்தன்மையற்றவையாகவும் முன்னுக்குப் பின் முரணாணதாக இருப்பதாகவும்; கட்சி குற்றம்சாட்டி அவரை கட்சியின் வெகுசன அமைப்புகளிலும் வகித்த பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைப்பதென அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இக்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பெண், மு மயூரனுக்கும் தனக்கும் இருந்த உறவை வஞ்சக எண்ணத்தோடு அரசியல் பழிவாங்கல்களுக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். அவர் மு மயூரன் மீது சுமத்தப்பட்ட பழியை களைவதற்காக தனது முகநூலில் குற்றம்சாட்டியவர்களை கடுமையாக விமர்சித்தும் வருகின்றார்.

கட்சிக்கு அல்லது கட்சியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருக்கு நிதிப்பங்களிப்பினைச் செய்த மோகனதர்ஷினி என்பவர் மேற்கொண்ட தனிநபர் தாக்குதலே இதுவென கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. மோகனதர்ஷினியிடம் இருந்த பெறப்பட்ட பணம் மீளளிக்கப்பட்ட போதும் அவர் கட்சியில் அதீத செல்வாக்கை செலுத்துவதாகவும் அவ்வட்டாரங்கள் தேசம்நெற் க்கு தெரிவிக்கின்றன. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஒரே இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி யின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதன் தலைவராக சி கா செந்தில்வேல் உள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் பொதுவெளியில் கருத்துக்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால் பலரும் அவருக்கு இந்நிலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இதே போன்றதொரு குற்றச்சாட்டு பிரித்தனியாவில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி கண்டுவரும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் மீதும் சுமத்தப்பட்டு உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி அமைப்பை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தரும் தமிழ் அரசியல், கலை, இலக்கிய எழுத்துக்கள் மூலமும் அறியப்பட்டவரான சேனன் உருவாக்கி இருந்தார். இன்று இவ்வமைப்பு கணிசமான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுடன் புலம்பெயர் நாடுகளில் அமைப்பு வடிவில் உள்ள ஒரே தமிழ் இடதுசாரி அரசியல் ஸ்தாபனம் இதுவென்றால் அது மிகையல்ல.

தங்களை முற்போக்காளர்கள் பெண்ணிய போராளிகள் என முத்திரைகுத்திக் கொண்ட 20 பேர் கையெழுத்திட்ட முகநூல் போராட்டம் ஒன்று ஓகஸ்ட் பிற்பகுதியில் பெரும் பரபரப்புடன் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியின் உறுப்பினர் மோகனதர்ஷினி, தீப்பொறி அமைப்பினரான ராகுல் சந்திரா (ரகுமான் ஜான்) ஆகியோர் கையெழுத்திட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். குற்றம்சாட்டப்பட்டவருடனும் குற்றம்சாட்டப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி அமைப்புடனும் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவர்களும் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தவர்களுமே இப்போராட்டத்தில் குதித்துள்ளனர். முற்றிலும் தனிப்பட்ட வஞ்சம் தீர்க்கின்ற செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.

தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் சூழலில் தங்கள் சொந்த நலன்களை முன்நிறுத்தி அப்பாவிப் பெண்களின் பெயர்களை தெருவுக்கு இழுத்துவிடுகின்ற முயற்சியாக மட்டுமே இதனைப் பார்க்க முடிகின்றது. ஏற்கனவே தமிழ் பெண்கள் பொது வெளிக்கு வரமுடியாத அளவுக்கு அவர்கள் அச்சமான சூழலில் உள்ள போது காதல் மற்றும் உறவுப் பிரச்சினைகளை பொதுவெளியில் கொண்டுவந்து விவாதித்து பெண்களை கேவலப்படுத்துவதும் இடம்பெற்று வருகின்றது. தங்களுடைய கருத்துக்கு மாறான பதிவுகளுக்கு ‘லைக்’ போட்டவர்களை அணுகி அவர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் ‘தம்பி எனக்கு வயசாச்சு இவையோட எனக்கு மல்லுக்கட்ட முடியாது. அது தான் ‘லைக்’கை எடுத்துப்போட்டன்’ என தேசம்நெற் க்கு தெரிவித்தார். ‘தம்பி நாளைக்கு உங்களைப் பற்றியும் ஏதும் எழுதிப் போடுவினம், கவனம்’ என்று என்னை எச்சரிக்கையும் செய்தார். முகநூல் ரவுடிகள் ஜாக்கிரதை.

புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி போல் குழுவாதத்திற்குள் சிக்காத தமிழ் சொரிடாரிட்டி அமைப்பு மேற்படி குற்றச்சாட்டை முற்றிலும் பாறுபட்ட கோணத்தில் அணுகியுள்ளது. தமிழ் சொலிடாரிட்டியின் முக்கியஸ்தர் ராஜரஞ்சன் புஸ்பராகவன் இவ்விடயம் தொடர்பில் வெளியிட்ட பதிவில்: “அரசியல் ரீதியாக அமைப்பை எதிர்கொள்ள வக்கற்றவர்கள் இத்தகைய சிறுமைத்தனமான செயல்களில் – அவதூறுகளில் ஈடுபடுகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர்கள் பலரது அரசியற் போதாமை பல முன்பே விமர்சிக்கப் பட்டிருக்கிறது. இதில் பலர் சமூக விரோத அரசியலை நீண்ட காலம் செய்து வருபவர்கள் என்பது தெரிந்த விசயமே” எனத் தெரிவித்துள்ளார். மேலும் “அவதூறுகளுக்கு நாம் அடிபணியப் போவதில்லை“ என்றும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான தனிமனித உறவு சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இது ஆரம்பமும் அல்ல முடிவும் அல்ல என்பது தெளிவாகின்றது. தமிழ் இடதுசாரி அரசியல் ஒரு தெளிவுக்கு வருவதற்கு முன் இன்னும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என்பது திண்ணம். இவற்றை கடந்துசெல்லும் வல்லமை ஏற்கனவே நலிந்துள்ள இடதுசாரி ஆர்வலர்களிடம் இருக்கின்றதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *