தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக தமிழக முதல்வரினால் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்றொழில் அமைச்சரினால் இன்று (28.08.2021) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இலங்கைத் தமிழ் மக்கள் தஞ்சம் தேடி வந்த சந்தர்ப்பங்களில், அவர்களை அரவணைத்து பாதுகாப்பு அளித்தவர்கள் தமிழக மக்கள். அதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான கலைஞர், எம்.ஜீ.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் தங்களால் முடிந்தளவு ஒத்துழைப்புகளை வழங்கியிருக்கின்றார்கள்.
அதேபோன்று ஏனைய அரசியல் தலைவர்களும் தங்களுடைய தார்மீக ஆதரவினை வெளிப்படுத்தி வந்தனர். இதனால்தான் தமிழக மக்கள் குரல் கொடுப்பார்கள், கரம் நீட்டுவார்கள் என்ற நம்பிக்கை இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் ஆழமாக இருக்கின்றது.
அதனையும் நிரூபிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் வாழ்வாதார மலர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்நிலையில், மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருவதற்கு விரும்புகின்ற எமது மக்களுக்கு, கௌரவமான வாழ்வியலை ஏற்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்வதற்கு தயாராகவே இருகின்றேன்.
இதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழக முதல்வர் தீர்க்கமான கரிசனை செலுத்த வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும்.
அதாவது, இலங்கை கடற்பரப்பை நம்பி வாழுகின்ற தமிழக கடற்றொழிலாளர்களுக்கு, மாற்று தொழில் முறைகளை வழங்குது குறித்து தமிழக முதல்வர், இந்திய மத்திய அரசாங்கத்துடன் தீர்க்கமான பேச்சுக்களை முன்னெடுத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.