விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் இலங்கையில் போரை நிறுத்த முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பது புலிகள் மீது பழிபோட்டு திசை திருப்பும் முயற்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் நிலைகுறித்து விளக்குவதற்காக நேற்று முன்தினம் மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், “இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த இந்திய அரசால் முடியும்; ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதாக உறுதியளிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.
ஒரு முறைக்கு பல முறை போர் நிறுத்தத்திற்கு தயார் என்றும், இந்தியாவுடன் நட்புறவையே விரும்புகிறோம் என்றும் விடுதலைப் புலிகள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இந்த உண்மையை மறைத்துவிட்டு போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசு தயார் என்பதுபோலவும், புலிகள் தான் அதற்குத் தயாராக இல்லை என்பது போலவும் கருத்தை பரப்பி தமிழர்களைக் குழப்பும் முயற்சியில் சிதம்பரம் ஈடுபட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல், தீர்வு காண்பதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பது கொழும்பின் குரலையே எதிரொலிப்பதாகும்.
இதன் மூலம் உண்மையான அரசியல் பின்னணிகளை மக்களுக்கு விளக்காமல் புலிகள் மீது பழிபோட்டு திசைதிருப்புவதில் சிதம்பரம் முனைப்பாக இருக்கிறார் என்பது தெரியவருகிறது.
மனிதநேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை சிதம்பரத்திற்கோ, இந்திய அரசுக்கோ இருப்பது உண்மையானால் ஜனநாயக அடிப்படையிலான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அதற்கான பேச்சுவார்த்தைக்கு முன் ஏற்பாடுகளை உடனடியாக செய்யவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால் தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று சிதம்பரம் போன்றவர்கள் கூறுவது இனவெறியர்களின் கூற்றாகவே அமையும்.
ஆகவே உண்மைகளை திசை திருப்பி பிரச்சினையை மென்மேலும் நீடிக்காமல் இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு சுமுகமான அரசியல் தீர்வுக்குரிய வரைவுத் திட்டத்தை இந்திய அரசு முன்வைக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1,2 ஆகிய இரு நாட்களில் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் தலைமையில் “ஈழம் காப்போம்’ என்ற முழக்கத்துடன் ஊர்ஊராய் நடைப்பயணம் நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.