“புலம்பெயர்ந்துள்ள தமிழ்மக்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கின்ற செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும்.” என ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இரா.துரைரெட்ணம் மேலும் கூறியுள்ளதாவது,
“நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழ் அகதிகள் தொடர்பில் இந்தியாவின் செயற்ப்பாட்டிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையானது தமிழ்நாட்டு அரசு தமிழர்களுக்கு வழங்கிய ஒரு நல்ல செய்தியாகும்.
யுத்தக்காலத்தில் புலம்பெயர்ந்து சென்ற மக்களுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இலங்கை அரசு, புலம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக அதாவது, அவர்களுக்காக நல்ல திட்டங்களை அமுலாக்கி அவர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்கின்ற செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.