ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளன. அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிய நிலையில், எப்போது வேண்டுமென்றாலும் அதிபர், மந்திரி சபைகளை அமைக்க தலிபான்கள் தயாராகி வருகின்றன.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் தலிபான் வீரர்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் வலம் வரும் நிலையில், பெரும்பாலான நாடுகள் தங்களது உதவிகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு சேவைகள் முடங்கப்படும், ஊழியர்கள் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
மனிதாபிமான கண்டோட்டத்தில் ஆப்கானிஸ்தான் சூழ்நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என ஆப்கானிஸ்தானின் ஐ.நா.வுக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலாக்பரோவ் கவலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கடந்த சில நாட்களாக உணவு விலை 50 சதவீதம் அளவிற்கும், பெட்ரோல் விலை 75 சதவீதம் அளவிற்கும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அரசு சேவைகள் செயல்பட முடியாது. அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாது. இப்படியே சென்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் உணவு பற்றாக்குறை ஏற்படும். மூன்றில் ஒருவர் பசியால் வாடும் நிலை ஏற்படும் என ரமீஸ் அலாக்பரோவ் தெரிவித்துள்ளார்.
நேற்று, காந்தகார் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தலிபான்கள் அணி வகுப்பு நடத்தியுள்ளனர். விமானங்களை இயக்க அனுபவம் வாய்ந்த விமானிகள் இல்லாத நிலையில், கத்தார் ஏர்வைஸ் விமானம், தங்களுடைய விமானிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.