இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதல், மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல்நிலை துடுப்பாட்டவீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. ரோகித் சர்மா 11 ஓட்டங்கள், கே.எல்.ராகுல் 17 ஓட்டங்கள், புஜாரா 4 ஓட்டங்கள் என ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் தலைவர் கோலி-ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடினர்.
ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழக்க, தலைவர் கோலி அரை சதம் அடித்த நிலையில், ராபின்சன் ஓவரில் அவரும் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்களும் அணியின் ஓட்டத்தை உயர்த்தமுடியாமல் தடுமாறினர். ரகானே 14 ஓட்டங்களிலும், ரிஷப் பண்ட் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த நெருக்கடியான நேரத்திலும் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் ஆடிய ஷர்துல் தாகூர், 31 பந்துகளில் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், அவர் 57 ஓட்டங்கள் எடுத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக வோக்சிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின்னர் பும்ரா (0), உமேஷ் யாதவ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களிலும் சகலவிக்கெட்டுக்களையும். இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 3 விக்கெட், ஓக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடுகிறது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி ஒன்பது ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் 21 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.