இலங்கை தமிழரசு கட்சி தவிர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கையொப்பத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. ஐந்து கட்சிகள் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் மற்றும் விநோநோகராதலிங்கம் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர். அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் என்.சிறிகாந்தா ஆகியோரும் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இந்த கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.எவ்வாறாயினும் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள் குறித்த கடிதத்தில் கைச்சாத்திட்டிருக்கவில்லை. இந்தநிலையில் அந்த கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்த விடயம் குறித்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்த கடிதத்தில் கைச்சாத்திட மறுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.
இதே நேரம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முன்னெடுப்பில் ஆவணமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது..
ஏற்கனவே ரெலோவின் முன்னெடுப்பில், பல கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் “இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த ஆவணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கையொப்பமிட மாட்டார்கள் என அவர்களின் கூட்டணி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த ஆவணத்தில், பான்கீ மூனால் 2010 இல் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தயாரித்த அறிக்கையில், இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளனர்.
இவற்றில் சில போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாக்கியத்தால், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதுடன் மூவரும் தனியாக ஐ.நாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தமது அதிருப்தியை ஆவணத் தயாரிப்பில் ஈடுபட்ட சுமந்திரனிடம் அறிவித்துள்ளதாகவும், அவை ஏற்கப்படாததன் காரணமாக கையொப்பமிட மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.
……………………………………………………………………………….
இந்த இடத்தில் தமிழ் மக்கள் இந்த தமிழ்தலைவர்கள் பேசும் போலித்தேசியம் தொடர்பில் உற்றுநோக்க வேண்டிய தேவையுடையோராகவுள்ளனர். தேர்தல்காலங்களில் மேடைக்கு மேடை இவர்கள் தனிநாடு தனிநாடு என முழுங்கிவிட்டு ஆளுக்கொரு கொள்கையுடன் – ஆளுக்கொரு கட்சி என மேலும் பிரியப்போகிறார்கள். ஓட்டு அரசியலுக்காக மட்டுமே இவர்கள் இயங்குகிறார்கள் என்பதை இதைவிட தெளிவாக ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாது.
இவர்களுடன் ஒப்பிடும் போது அரச தரப்பில் இணைந்து நிற்கும் தமிழ்தலைவர்கள் எவ்வளவோ மேல் போல படுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் சர்வதேசத்தினுடைய இந்த வாய்ப்பை வழமை போல இந்த போலி தமிழ்தேசியவாதிகள் எப்படி வீணடிக்கப்போகிறார்கள் என. !