“இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக் கோரிய தீர்மானம் நிறைவேற்றம்.” – ஈழத்தமிழர்கள் தொடர்பில் ஸ்டாலின் மேலும் ஒரு நகர்வு !

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமர்ப்பித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட போது ,

குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டப்பூர்வமான உரிமையாகும். இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கிட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்கிறது.

அதன்படி பார்க்கும்போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாது. அதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 என்று பெயரிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகளாக வருபவர்களைச் சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும். மத ரீதியிலோ, இன ரீதியிலோ அல்லது எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும்.

வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வதாக அமையாது. அரசியல் ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிகத் தவறானதாகும்.

அதிலும், குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் எல்லாம் வரலாம் என்றால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்? என்றும் இதுதான் இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்.இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களில் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவர்கள், இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவர்களது உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது.

மத்திய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைவிட, வஞ்சனையுடன் செயல்படுகிறது. அதனால்தான் இதனை எதிர்க்க வேண்டி உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *