ஆப்கானிஸ்தானுக்கு 3 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளையும், 200 மில்லியன் யுவான் (31 மில்லியன் அமெரிக் டொலர்) மதிப்புள்ள அவசர மனிதாபிமான உதவிகளையும் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் குறித்து ஆப்கானிஸ்தானை அண்மித்துள்ள ஏனைய நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இதனை அறிவித்துள்ளார்.
இதன்போது அவர் தலிபான்களால் நிறுவப்பட்ட அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாக இருப்பதால் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக உள்ளதாகவும் பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களிடம் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளும் கொவிட் -19 தொற்றுநோய் தடுப்பை வலுப்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு உதவுதல், எல்லை துறைமுகங்களை திறந்து வைப்பது, அகதிகள் மீதான மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வாங் யி வலியுறுத்தினார்.
அதேநேரம் பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்தவும் இல்லாதொழிக்கவும் தலிபான்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்லும் பயங்கரவாதக் குழுக்களைக் கைது செய்து ஒழிக்க உளவுத்துறை பகிர்வு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துமாறும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.
ஆப்கானிஸ்தானில் பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் என்பதால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்க முழு கடமையையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.