தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை பொலிஸாரும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்தது சர்வதேச விசாரணையாளர்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடம் அறிக்கைகளை பதிவு செய்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2019 நவம்பரில் கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அதிகமானோர் இந்த ஆண்டு நடைபெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்றும் சிலர் இறந்தவர்களுக்கான நினைவேநந்தல்கள் மற்றும் காணாமல் போனோருக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜெனீவாவில் இலங்கையை பற்றி விவாதிக்கும் போது பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறல் வேண்டும் என அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.