விவசாய அமைச்சினால் நடாத்தப்பட்ட 2021 வருடத்திற்கான விவசாயம் சார்ந்த கண்டுபிடிப்புக்களுக்கு மதிப்பளித்தலும் விவசாயத்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கக்கூடிய கண்டுபிடிப்புக்களை வர்த்தக மயப்படுத்தலும் கண்டுபிடிப்பாளர்களை கௌரவப்படுத்தலும் எனும் தொனிப்பொருளில் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட தெரிவில் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 03 கண்டுபிடிப்புகளில் மட்டக்களப்பைச்சேர்ந்த தங்கவேல் சக்திக்குமார் , சுதர்சினி சக்திக்குமார் , சக்திக்குமார் போஜஸ்வினி , சக்திக்குமார் பிரஜித் ஆகியோர் சேர்ந்து வடிவமைத்து உருவாக்கி தங்கவேல் சக்திக்குமார் அவர்களால் போட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட சேதனப்பசளை தயாரிக்கும் இயந்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி கண்டுபிடிப்பானது தேசிய ரீதியிலான உற்பத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் , அனுசரணை வழங்கும் விதமாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் தேசிய ரீதியாக செயற்படுத்தப்படும் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தில் இணைத்துக்கொள்வதற்காக விவசாய அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது .
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த இந்த நான்கு கண்டுபிடிப்பாளர்களும் ஏற்கனவே பல கண்டுபிடிப்புகளுக்காக தேசிய விருதுகள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .