காணமலாக்கப்பட்டவர்கள் எங்கே..? – மரணசான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி !

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் இன்று 1675 ஆவது நாளாக எமக்கு நீதி கோரிய தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் உள்ளோம். நூற்றுக்கு மேற்பட்ட, எம்முடன் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்த சகோதர சகோதரிகளை இழந்து விட்ட நிலையிலும், எமக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்ற முனைப்புடன் உள்ளோம்.

இந்த நிலையில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கை ஜனாதிபதி அங்கு ஐ.நா. பொதுச் செயலர் அன்ரனியோ அவர்களுடன் நேற்று முன்தினம் (19.09.2021) விசேட சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். அவர் அங்கு இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களும், நட்டஈடும் கொடுப்பது பற்றி கூறியிருந்தார். அத்துடன் உள்ளகப் பிரச்சனைகள் உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்து அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தோம்.

எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் நேரடியாக சர்வதேசத்தினாலேயே குற்றம் சாட்டப்பட்ட, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும்படி ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்ட  சிறிலங்காவின் ஜனாதிபதியை,  அதே ஐ.நா மன்றில் சர்வதேச சமூகம் இன்று வரவேற்று கைலாகு கொடுப்பதை நாம் கவலையுடனேயே உற்றுநோக்குகின்றோம். வேறு வழியின்றி எமது கடைசி நம்பிக்கையாக சர்வதேச நீதி பொறிமுறையே இருப்பதால், இந்த இராஜதந்திர சம்பிரதாயங்களையும் தாண்டி சர்வதேசம் பாதிக்கப்பட்ட எமக்கு நீதியை பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம். இவ்விடயத்தில் ஐ.நாவின் செயலாளர் உட்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் நீதி பொறிமுறை தொடர்பாக கேள்வி எழுப்பாமை பாதிக்கப்பட்ட எமக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது.

2009, மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து பாதுகாப்புத் தரப்பினரதும், அரசினதும் உறுதிமொழிகளை நம்பி எமது உறவுகளைக் கையளித்தோம். எம் முன்னிலையில் எமது உறவுகள் சரணடைந்தனர். கண்கண்ட சாட்சிகளான நாம், எமது உறவுகளை மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு நாளாவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தாலோ அல்லது அவர்களுடன் உறவு பேணியிருந்தாலோ சரணடையுங்கள் அல்லது எம்மிடம் ஒப்படையுங்கள், நாம் புனர் வாழ்வளித்து மீண்டும் உங்களிடம் ஒப்படைப்போம் என்று உறுதியளித்த படையினரதும், அரசினதும் பாதுகாப்புச் செயலர் தற்போது ஜனாதிபதியாக உள்ளார்.

நாம் எமது உறவுகளை உயிருடனேயே கையளித்தோம். எனவே அவரும் எங்கள் உறவுகளை புனர்வாழ்வளித்து எம்மிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். மாறாக உள்நாட்டிலும், ஐ.நா. தலைமையகத்தில் வைத்தும் மரணச் சான்றிதழும், நட்டஈடும் கொடுத்து காணாமலாக்கப்பட்டோர் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறுவது புத்த தர்மத்துக்கு ஏற்புடையதா? இக்கூற்றை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு புத்தபெருமானின் போதனைகளை பின்பற்றும் மற்றும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் இதைக் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம்.

மேலும் உள்ளகப் பொறிமுறையில் எமது பிரச்சனையைத் தீர்ப்பதென்பது கடல் வற்றிக் கருவாடு சாப்பிடுவதற்கு ஒப்பானது. இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதோ அரிது. அப்படியிருந்தும் அரிதாக ஓரிரு வழக்கில், நீதி வழங்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் ஜனாதிபதி அவர்களுக்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கி விடுவார். அத்துடன் அவர்களை மேலும் இது போன்ற கொலைகளைச் செய்யத் தூண்டும் விதத்தில் ஊக்குவிப்பாகப் பதவி உயர்வும் வழங்குவார்கள். உதாரணத்துக்கு அண்மையில் மிருசுவில் 8 பேர் கொலையில் மரண தண்டனை விதிக்கப் பெற்ற சுனில் ரத்னாயக்க.எனவே எமக்கு மரணச் சான்றிதழும் வேண்டாம், காணாமல் போனோர் அலுவலகமும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம் திருப்பித் தருவதாகக் கூறி பொறுப்பேற்ற எம் உறவுகள் எமக்கு வேண்டும். அதற்கான நீதி இழுத்தடிப்பு இல்லாமல் வழங்கப்பட ஐ.நா.வால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *