“ரோம் சாசனத்தில் கையெழுத்திட இலங்கையை வலியுறுத்துங்கள். இல்லையேல் தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
அங்கு மேலும் பேசிய அவர்கள்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல. தமிழர்களையும் விசாரிக்க விரும்புவதாக சுமந்திரன் கூறுகிறார். நீதி பெறுவதற்கான சிறந்த வழி அவர்கள் அனைவரையும் விசாரிப்பது என்றும் கூறுகிறார். அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு கொண்டு வருவதன் ஊடாக சுமந்திரன் தனது வழக்கு வலுப்பெறும் என்று கூறுகிறார்.
அவர் இங்கே என்ன பேசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் கூறுகிறோம். சுமந்திரன் மற்றும் அவரது நண்பர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை இலங்கையை ரோம் சட்டத்தில் கையெழுத்திடச் செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.
இந்த ரோம் சட்டத்தில் கையெழுத்திடாமல், நீதி வழங்கப்படாத நிலமையே உள்ளது. எனவே, நாங்கள் இந்த விடயத்தில் சுமந்திரனை மழுப்ப வேண்டாம் என கேட்கிறோம். சில செயல்களைக் செய்து காட்டுங்கள். ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு இலங்கையைக் கோருவதற்கு உங்களால் முடியாவிட்டால், தயவுசெய்து தமிழர்களை விட்டுவிட்டு உங்கள் வீட்டிற்குத் திரும்புங்கள்.
நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நீங்கள் தமிழர் தரப்பை அழிக்கிறீர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.