ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி தலைவர் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 185 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணிசார்பில் லீவிஸ் 36 ஓட்டங்களையும் , ஜெய்ஸ்வால் 49 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ராஜஸ்தான் சார்பில் மஹிபால் லோம்ரோர் அதிரடியாக ஆடி 17 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 ஓட்டங்கள் விளாசினார்.
பஞ்சாப் அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடினர். அகர்வால் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். பஞ்சாப் அணியின் எண்ணிக்கை 120 ஆக இருந்தபோது கே.எல்.ராகுல் 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் மயங்க் அகர்வால் 67 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய மார்கிராம், நிகோலஸ் பூரன் இணைந்து பொறுப்புடன் ஆடினர்.
ஒரு கட்டத்தில் 15 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது, அதுவும் இறுதி இரண்டு ஓவர்களில் அவர்களுடைய வெற்றிக்கு 8 ஓட்டங்கள் மட்டுமே தேவைபட்டது.
19-வது ஓவரை வீசிய முஸ்தாபிஜூர் ரஹ்மான் சிக்கனமாக 4 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார், இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலை இருந்த போதுதான் போட்டியில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.
20 வயதான கார்த்திக் தியாகியின் இறுதி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்து டாட் ஆனது. 2வது பந்தில் மர்க்ராம் ஒரு ஓட்டம் அடித்தார். 3வது பந்தில் சிறப்பாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரான் விக்கெட்டை பறித்தார்.
இதனால் கடைசி 3 பந்துகளில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன் பின்னர் 4 வது பந்தும் டாட் ஆனது. 5வது பந்தில் தீபக் ஹூடா டக் அவுட்டாகி வெளியேறினார். கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது பாவியன் அலனுக்கு எதிராக அதுவும் டாட் ஆனது. இதனால் ராஜஸ்தான் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் ஒரே ஒரு ஓட்டத்தை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார் கார்த்திக் தியாகி.
இறுதியில், பஞ்சாப் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து இரண்டு ஓட்டங்களால் தோற்றது.
இதன்மூலம் கடைசி ஓவரில் இரண்டு ஓட்டங்களால் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது கார்த்திக் தியாகிக்கு அளிக்கப்பட்டது.