“ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா?” – சாணக்கியன் கேள்வி !

“நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா?”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியு்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.

கடந்த காலங்களில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவர்கள் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களாகவே காணப்பட்டனர். இன்று நாங்கள் பார்த்தால் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களே இவ்வாறு கோஷங்களை எழுப்புகின்றனர்.

இவ்வாறு கோஷங்களை எழுப்புவதற்கான பிரதான காரணங்களாக நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு, நாட்டில் எரிவாயு இல்லை. அதேபோன்று நாட்டில் உரம் இல்லை. சீனி கொள்வனவில் மோசடி, பி.சி.ஆர் செய்வதில் மோசடி. இவற்றிற்கு எல்லாம் ஜனாதிபதி, பிரதமர் மாத்திரம் காரணம் இல்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுமே காரணம்.

நாங்கள் இன்று வனஜீவராசிகள் அமைச்சு குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம். வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர்தான் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனால் அவர் அம்பாறையில் காடுகளை அழித்து மரமுந்திரிகை செய்கின்றார். தகுதி இல்லாதவர்களுக்கு ஆசனங்களை வழங்கி அவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்கினால் இந்த நிலைதான் ஏற்படும்.

தற்போது ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். அவரது கருத்துக்களும் அவ்வாறே உள்ளது. நாங்கள் இனவாதமாக செயற்படும் மத தலைவர்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாத தாக்குதல்தாரிகளுக்கு சூத்திரதாரி அல்லாஹ்தானென ஞானசார தேரர் சொல்கிறார். அவரின் கருத்தை கண்டிக்கிறேன். இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் மௌனம் காப்பதேன்? எந்த நேரத்திலும் இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென ஞானசார தேரர் கூறுகிறார். அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள்?

நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா? என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுகின்றார். ஆனால் நாட்டில் நடப்பதே வேறு விதமாக காணப்படுகின்றது.

ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *