“கைதுகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

“கைதுகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது.” என  தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று   திலீபனுடைய நினைவுத்தூபி அமைந்திருந்த இடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுடன் மேலும் இருவரையும் கைது செய்ததுடன் சில பெண்களையும் தாக்கி மிகக் கீழ்த்தரமாக காட்டுமிராண்டித்தனமாக பொலிசார் நடந்துகொண்ட காணொளி காட்சிகளை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. உலகத்திலே நினைவேந்தல் உரிமையை மறுப்பது என்பது ஐ.நாவின் மனித உரிமை சாசனத்தை மீறுகின்ற நடவடிக்கையாகும்.

ஆட்சித் தலைவரான ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் உரையாற்றி விட்டு அங்கிருக்கின்ற நேரத்தில் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் தடையுத்தரவு இன்று ஆரம்பிப்பதற்கு முந்தைய தினமே பொலிஸார் தடைபோட ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை மூலம் தமிழ் மக்களுடைய தேசிய உணர்வுகளை விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடக்க முடியாது. எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் கட்சி பேதங்களைக் கடந்து நினைவேந்தல்களை பாரியளவில் செய்வதுதான் இவர்களுக்கான சரியான பதிலடியாக இருக்கும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *