எளியவனை வலியவன் இன்னும் மிதிக்கின்றான்! மனித சமூகம் நாகரீகமடைந்துவிட்டதா?

அமெரிக்கா – சீனா சண்டை இப்ப நம்மட தவறணைக் கோஸ்டியளின் சண்டை லெவலுக்கு வந்திட்டுது. ஹூவாய் நிறுவனத்தின் பிரதான நிதிப் பொறுப்பாளர் அந்நிறுவனத்தின் உரிமையாளரின் மெங் வன்சூ மூன்று ஆண்டுகளுக்கு முன் கனடாவில் அவருடைய இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அமெரிக்க அரசின் தடையுத்தரவை மீறி ஈரானுடன் நிதிப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பதிலுக்கு சீனா இரு கனேடிய ராஜதந்திரிகளை தன்நாட்டு இராணுவ இரகசியங்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்து பதிலடி கொடுத்தது.

இப்போது அமெரிக்கா மெங் வன்சூ குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று சொல்லி அவரை விடுதலை செய்ததை அடுத்து சீனாவும் தான் சிறை வைத்த இரு ராஜதந்திரிகளான மைக்கல் கோவ்றிக் மற்றும் மைக்கல் ஸ்பாவ்வோர் இருவரையும் விடுதலை செய்துள்ளது.

இதுவரை உலக பொலிஸ்காரனாக உலா வந்த அமெரிக்காவிற்கும் அதன் வாலாகத் திரிந்த பிரித்தானியாவிற்கும் இனி இந்த பொலிஸ்காரன் விளையாட்டுச் சரிவராது. 2019இல் பிரித்தானிய கடற்படை ஈரானிய பெற்றோல் சுப்பர் ராங்கர் ஒன்றை கில்பிராட் கடற்பகுதியில் வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட சிரியாவுக்கு பெற்றோல் அனுப்பப்படுகின்றது என்று கூறி பிரித்தானிய கடற்படை ஈரானிய ராங்கரைக் கைப்பற்றியது. அதனையடுத்து ஈரான் பதிலடியாக பிரித்தானிய ராங்கரை வளைகுடாப் பகுதியில் கைப்பற்றியது. அதன் பின் இரு தரப்புமே உடன்பாட்டுக்கு வந்து ஈரான் தான் கைப்பற்றிய பிரித்தானியாவின் ராங்கரை விடுவிக்கு ஈரானின் ராங்கரை விடுவிக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பிரித்தானியா தான் கைப்பற்றிய ஈரானிய ராங்கரை விடுவித்தது.

சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயம் எல்லாம் வறுமைப்பட்டவர்களுக்கும் வலுவில்லாதவர்களுக்கும் மட்டுமே. சட்டம்இ ஒழுங்குஇ நீதிஇ நியாயம் எல்லாம் வலுவானவர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் சாதகமாகவே வேலை செய்யும். இது தனிப்பட்டவர்கள் சார்ந்தது மட்டுமல்ல நாடுகள் மட்டத்திலும் இதுவே நடைபெறுகின்றது. வலுவான நாடுகள் வலுவற்ற நாடுகளை ஆட்டிப்படைப்பதும் இதன் அடிப்படையில் தான்.

டார்வினின் ‘தி சர்வைவல் ஒப் தி பிற்றஸ்ட் – The survival of the fittest’ காடுகளுக்குள் உள்ள விலங்குகளுக்கு மட்டுமல்ல நாட்டுக்குள்ளும் நாடுகளுக்கு இடையேயும் வீடுகளுக்குள்ளும் வீடுகளுக்கு இடையேயும் இதுவே பொதுவிதி.

இப்போது என்னமோ சுத்தமான சுவாமிப்பிள்ளைகளாக சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயமாக நடக்கும் தங்களை சீனா குறுக்கு வழியில் மடக்கிவிட்டதாக மேற்குநாட்டு ராஜதந்திரிகள் புலம்புகின்றனர். பிடல் கஸ்ரோவை கொல்வதற்கு 600க்கும் மேற்பட்ட தடவைகள் முயற்சி செய்த போது எந்தச் சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயத்தை கடைப்பிடித்தார்கள்? ருவின் ரவரை தாக்கி அழித்தவர்கள் சவுதிய அரேபியர்கள் ஆனால் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக் மீது படையெடுத்து அந்நாட்டில் மனித அழிவுக் கணக்கெடுப்பின்படி உத்தியோகபூர்வ எண்ணிக்கை 200,000. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம்.

ஈராக் மட்டுமா, இந்த மேற்குலகம் தலையீடு செய்த அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இன்றும் உயிரழிவுகள் நடந்தவண்ணமே உள்ளது. ஆனால் சீனா, ரஸ்யா, வடகொரியா போன்ற நாடுகள் வலுச்சமநலையை வைத்திருப்பதால் மட்டுமே இன்று உலகில் ஓரளவு சமாதானம் நிலவுகின்றது. முதலில் யாரும் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற ஒப்பந்தமே இதுவரை சமாதானத்தை நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது.

குடும்பம் என்பது சிறிய அரசியல். அரசியல் என்பது பெரிய குடும்பம். எதிலும் டார்வினின் கூர்ப்புக்கொள்கையே இன்றும் நிலைக்கின்றது. அதாவது ‘தி சர்வைவல் ஒப் தி பிற்றஸ்ட்’. ஆகவே மனிதன் நாகரிகமடைந்துவிட்டான் என்பது வெறும் ஆடை, ஆபரணங்கள், சார்ந்தது என்றால் அதில் ஓரளவு உண்மையுள்ளது. ஆனால் நாகரீகம் சிந்தனை சார்ந்தது என்றால் அது பற்றி மீளச் சிந்திக்க வேண்டும். எளியவனை வலியவன் மிதிக்கின்ற சமூகம் நாகரீகமான சமூகமாக கருதப்பட முடியாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *