மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைகள் ஆரம்பம் !

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட  மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் கடந்த 23.09.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் அவர்களது கைதுக்குரிய காரணம், கைது செய்யப்பட்டமைக்கான ரசீது வழங்கப்பட்டனவா, கைது செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பீ அறிக்கைகள்  உள்ளடங்களாக விரிவான அறிக்கை ஒன்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண காவல்நிலைய தலைமை காவல்துறை பரிசோதகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை மன்னார் பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட, வங்காலைபாடு கிராமத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கடற்றொழிலாளிகள்  24.09.2021 (வெள்ளி) அன்று கடலுக்கு தொழிலுக்கு சென்று  வீடு திரும்பிய வேளையில் கடற்படையினரால் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் வெளிவந்த செய்திகளை அடிப்டையாக கொண்டும் எம்மால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான பூரண விளக்க அறிக்கை ஒன்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பேசாலை காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவறுத்தல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் பேசாலை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் அறிககையும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெறும்.

மேற்படி இரு முறைப்பாடுகளும் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *