“ஆசிரியர்கள் மீது சரத் வீரசேகர அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு !

“சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.” என இலங்கை  ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கொழும்பில் போராட்டம் நடத்திய பலரை பொலிஸார் நாளை மறுதினம் விசாரணைக்கு அழைத்திருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை  ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ( Joseph Stalin )தெரிவித்தார்.

“அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கொழும்பில் பாரிய வாகனத் தொடரணி ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதன்போது பொலிஸாரினால் 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த பேரணியில் தங்களது சொந்த வாகனங்களையே ஆசிரியர்களும் அதிபர்களும் பயன்படுத்தியிருக்கின்ற நிலையில், வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பொலிஸார் கொழும்பு கோட்டையிலுள்ள நிலையத்தினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகவிரோத செயற்பாடாகும்.

ஆர்ப்பாட்டம் செய்ய முழு சுதந்திரமும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. மறுபக்கத்தில் இலங்கை  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.

இந்த செயற்பாட்டிற்கு எதிராக எழும்படி மனித உரிமை அமைப்புக்கள் என பலரிடமும் கேட்கின்றோம். அதேபோல அடுத்தமாதம் 15ஆம் திகதி தென்மாகாண பாடசாலைகளை திறப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபரிகளின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை அறிவிக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *