பிரித்தானியாவின் லண்டனில் போலீஸ் அதிகாரியால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சாரா எவர்ட் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
லண்டனைச் சேர்ந்தவர் 33 வயதான சாரா எவர்ட். இவர் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சாராவின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் லண்டன் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லண்டனில் பெண்களுக்குப் பாதுகாப்பில் இல்லை என்றும், சாரா வழக்கில் குற்றவாளி விரைவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் பெண்கள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில் சாராவின் கொலை தொடர்பாக, 48 வயதான போலீஸ் அதிகாரியான வெய்ன் கூசன்ஸ் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்ததில், சாரா வீடு திரும்புகையில் வெய்ன் அவரை வழிமறித்து, கொரோனா விதிமுறைகளை மீறிவிட்டார் என்று கையில் விலங்கிட்டுக் கைது செய்துள்ளார்.
பின்னர் சாராவை லண்டனுக்கு வெளியே உள்ள தனது வீட்டுக்கு வெய்ன் கடத்திச் சென்றுள்ளார். அங்கு சாராவை பலாத்காரம் செய்து, கொன்று, பின்னர் தனது வீட்டுக்கு அருகே உள்ள ஏரியில் சாராவின் உடலுக்குத் தீயிட்டதாக ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பான வழக்கு கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது. இதில் நேற்று லண்டன் குற்றவியல் நீதிமன்றம், வெய்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கு குறித்து பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “சாரா குடும்பத்தினர் அனுபவித்திருக்கும் வலியை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இந்த கொடூரமான குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கான காரணங்களை நாம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இத்தீர்ப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.