ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் 15-ந்திகதி தலிபான் படையினர் முழுமையாக ஆட்சியை கைப்பற்றினார்கள். ஏற்கனவே தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர். அதில் விளையாட்டு போட்டிகள் நடக்கக்கூடாது என்பது முக்கியமானதாகும்.
மேலும் பெண்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்றும் தடை விதித்து இருந்தனர். அதை மீறுபவர்களுக்கு கொடூர தண்டனைகளையும் அவர்கள் வழங்கினார்கள். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் அதைபோல கொடூர தண்டனைகளை வழங்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் காரணமாக பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் வேறு நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கால்பந்து அணி பிரபலமாக செயல்பட்டு வந்தது. உயிருக்கு பயந்த அவர்களும் நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் தற்போது போர்த்துக்கல் நாட்டுக்கு சென்றுள்ளனர். அந்த வீராங்கனைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக போர்த்துக்கல் அரசு அறிவித்துள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.